பருவநிலை மாற்றம் மாநாடு: டென்மார்க் செல்ல கெஜ்ரிவாலுக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு..!!

டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில் சி-40 பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு, நாளை தொடங்கி வரும் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பிற்பகல் 2 மணியளவில் டென்மார்க் செல்ல இருந்தார்.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்ட சில கட்டுப்பாட்டுகளால் 25 சதவீதம் அளவுக்கு காற்று மாசுபாடு குறைந்துள்ளது.

இதையொட்டி, மாசு அளவை குறைப்பது மற்றும் பிற சுற்றுச்சூழல் பிரச்சனைகளையும் பற்றி பருவநிலை மாற்றம் மாநாட்டில் கெஜ்ரிவால் பேச இருந்தார். மேலும், மாநாட்டிற்கு செல்லும் 8 பேர் கொண்ட குழுவிற்கு கெஜ்ரிவால் தலைமை தாங்குவதாகவும் இருந்தது.

கடந்த வாரம் வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் ஊடக சந்திப்பில், கெஜ்ரிவால் டென்மார்க் செல்வது பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டபோது, பல்வேறு முக்கிய தரவுகளின் அடிப்படையில், அதிகாரிகளிடம் கலந்தாய்வு செய்து முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் பதிலளித்தனர்.

இந்நிலையில், கெஜ்ரிவால் டென்மார்க் செல்வதற்கான அரசு தரப்பு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக டெல்லி அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

டென்மார்க் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டிற்கு செல்ல மேற்கு வங்க மாநிலத்தின் நகர மேம்பாட்டுத்துறை மந்திரி ஃபிர்ஹாத் ஹக்கீமுக்கு அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment