பாம்பாறு அணையில் மூழ்கி 4 பேர் பலி- செல்போனில் செல்பி எடுக்கும்போது நடந்த விபரீதம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி அருகே உள்ள ஒட்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன்.

இவரது மகள்கள் சினேகா (வயது 19) பொறியியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார், கனிதா (18) பொறியியல் முதலாமாண்டு படித்து வந்தார். மகன் சந்தோஷ்(14) தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

பர்கூர் பகுதியை சேர்ந்த பெருமாள்சாமி என்கின்ற பிரபு என்பவரின் மனைவி நிவேதா (20). பிரபுவுக்கும், நிவேதாவுக்கும் கடந்த 15 தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது.

இந்நிலையில் கடந்த 6-ந் தேதி பிரபு, அவரது மனைவி நிவேதா, பிரபுவின் உறவினர் பெண் யுவராணி, இளங்கோவனின் மகள்கள் சினேகா, கனிதா, மகன் சந்தோஷ் ஆகிய 6 பேரும் ஊத்தங்கரை திரையரங்கில் படம் பார்த்துவிட்டு மாலை பாம்பாறு அணையை சுற்றிப் பார்க்க சென்றனர்.

அப்போது அவர்கள் 6 பேரும் ஆற்றில் செல்போனில் செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். திடீரென்று பின் பகுதியில் உள்ள சுமார் 20 அடி பாம்பாறு அணையில் விழுந்ததால் ஒருவர் பின் ஒருவராக ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டனர்.

அதில் 6 பேரும் இழுத்து சென்றதில் சினேகா, கனிதா, நிவேதா, சந்தோஷ் ஆகிய 4 பேர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். பிரபு, யுவராணி ஆகிய 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து தகவலறிந்த இறந்தவர்களின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு திரண்டனர்.

இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களும் தகவலறிந்து உடனே அங்கு வந்தனர். ஆற்றில் பிணமாக கிடந்த 4 பேரின் உடல்களையும் ஆற்றில் மீட்கப்பட்டது.

பின்னர் போலீசார் 4 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். செல்போனில் செல்பி எடுத்தபோது ஆற்றில் தவறி விழுந்ததில் அடித்து செல்லப்பட்டனர். இதில் புதுப்பெண் உள்பட 4 பேர் பலியாகி இருப்பது தெரியவந்தது.

பிரேத பரிசோதனைக்கு பிறகு இளங்கோவனிடம் 3 குழந்தைகளின் உடல்களையும், பிரபுவிடம் அவரது மனைவி உடலையும் ஒப்படைக்கப்பட்டது.

இளங்கோவின் குழந்தைகள் 3 பேரும் சினிமாவிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு பிணமாக கிடப்பதை பார்த்து அவர்களது உறவினர்கள் கதறி அழுதனர்.

நீரில் மூழ்கி பலியானவர்களில் சினேகா, கனிதா, சந்தோஷ் ஆகிய 3 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment