கூட்டணி அரசை கவிழ்க்க ஒரு போதும் நினைத்தது இல்லை: உத்தவ் தாக்கரே..!!

மகாராஷ்டிரா சட்டசபைக்கு வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ள தேர்தலை ஆளும் பா.ஜனதா – சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து சந்திக்கின்றன. இந்த நிலையில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாங்கள் (சிவசேனா) எந்த அதிகாரமும் இன்றி கடந்த 5 ஆண்டுகளாக அரசாங்கத்தில் இருந்தோம். பல்வேறு வேறுபாடுகள் இருந்த போதிலும் தவறு என பட்டதற்கு எதிராக குரல் கொடுத்தோம்.

ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் ஆட்சியை கவிழ்க்க ஒருபோதும் நினைத்தது இல்லை.

இந்த கூட்டணி நிலைத்து இருப்பதற்கு பா.ஜனதா, சிவசேனா இரண்டு கட்சிகளும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நாம் மனதை கட்டுப்படுத்த வேண்டும். தேவையின்றி வேகத்தை அதிகரித்தால் அது விபத்துக்கு வழிவகுத்து விடும். ஏற்கனவே அப்படி ஒரு விபத்து நடந்து உள்ளது. (2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது ஏற்பட்ட பா.ஜனதா – சிவசேனா கூட்டணி முறிவை குறிப்பிட்டார்)

சிவசேனா, பாஜக கொடி

நான் மாநில நலனுக்காக சமரசம் செய்து கொண்டுள்ளேன். மீண்டும் வெற்றி பெற்றால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு எங்களால் சிறந்த நிர்வாகத்தையும், ஆட்சியையும் கொடுக்க வேண்டும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

சிவசேனா மெட்ரோ ரெயில் பணிமனை அமைப்பதை எதிர்க்கவில்லை. ஆனால் அது அமைய உள்ள இடத்தை தான் எதிர்க்கிறது. மற்றவர்களின் கஷ்டத்தில் வளர்ச்சி இருக்க கூடாது. ஆரேகாலனியில் மெட்ரோ ரெயில் பணிமனை அமைப்பதை மும்பைவாசிகள் அனைவரும் எதிர்க்கிறார்கள். இது எனது கட்சி பிரச்சினை அல்ல.

நமக்கு மெட்ரோ ரெயில் மற்றும் நகரத்தின் வளர்ச்சி தேவை தான். அதற்காக நகரத்தின் அதிக மதிப்புமிக்க ஒன்றை இழந்து விடக்கூடாது. இயற்கை வனப்பகுதியையும், வனவிலங்குகளையும் கொண்ட உலகின் ஒரே நகரம் மும்பை தான். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Comments (0)
Add Comment