காங்கிரஸ் தலைவர்கள் அதிரடி மாற்றம் – சோனியா காந்தி முடிவு..!!

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வி அடைந்ததை தொடர்ந்து ராகுல்காந்தி தலைவர் பதவியில் இருந்து விலகினார். சோனியாகாந்தி இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார்.

சோனியாகாந்தி பொறுப்பேற்ற பிறகு காங்கிரஸ் கட்சியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்தார். முதல் கட்டமாக உத்தரபிரதேச மாநில காங்கிரசில் அதிரடியான மாற்றம் கொண்டு வரப்பட்டது.

மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ்பாப்பர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அஜய் குமார் லல்லு புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். இதே போல துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர்கள், செயலாளர்கள் ஆகியோரும் புதிதாக நியமனம் செய்யப்பட்டார்கள்.

40 வயதுக்குட்பட்டவர்களுக்கே கட்சியில் பொறுப்புகள் வழங்கப்பட்டன. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. பிரியங்காவின் அறிவுரையின் பேரில் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டது.

உத்தரபிரதேசத்தை தொடர்ந்து டெல்லி, மத்திய பிரதேசம், கர்நாடகா மாநிலங்களுக்கு புதிய தலைவர்களை நியமிக்க சோனியா காந்தி முடிவு செய்துள்ளார்.

ஷீலா தீட்சித் மறைவுக்கு பிறகு முழு நேர காங்கிரஸ் தலைவர் நியமிக்கப்படவில்லை. தலித் தலைவரான ராஜேஷ் லிலோதியா, சந்தீப் தீட்சித், முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து ஆகியோரில் ஒருவர் தலைவராக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல புதிய பொறுப்பாளரும் நியமிக்கப்படலாம்.

டிசம்பர் மாத இறுதியில் டெல்லி சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.

மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவராக முதல்-மந்திரி கமல்நாத் உள்ளார். தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று அவர் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக முன்வந்தார். ஆனால் கமல்நாத் விலகவில்லை.

அவருக்கு பதிலாக ஜோதிர் ஆதித்யா சிந்தியா அல்லது முன்னாள் முதல்-மந்திரி திக்விஜய் சிங் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படலாம்.

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக தினேஷ் குண்டுராவ் இருக்கிறார். அவர் நீக்கப்பட்டு புதிய தலைவர் நியமிக்கப்படுகிறார். புதிய தலைவர் தேர்வு தொடர்பாக அகில இந்திய பொதுச்செயலாளர் மதுசூதனன் மிஸ்திரி கடந்த வாரம் ஆலோசனை நடத்தினார். தலைவர் பதவியை கைப்பற்ற முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் முன்னாள் மந்திரி எச்.கே.பட்டீல் மற்றும் சிலர் இடையே போட்டி நிலவுகிறது.

இதே போல எதிர்க்கட்சி தலைவரும் தேர்வு செய்யப்படுகிறார். அடுத்த வாரம் சோனியாகாந்தி 3 மாநிலங்களுக்கு புதிய தலைவர்களை அறிவிக்கலாம் என்று தெரிகிறது.

ஏற்கனவே அரியானா, மகாராஷ்டிரா, திரிபுரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் புதிய நிர்வாகிகளுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், அந்த மாநில பொறுப்பாளருமான பிரியங்கா அடுத்த வாரம் ஆலோசனை நடத்துகிறார்.

Comments (0)
Add Comment