வவுனியாவில் கல் அகழ்வால் உயிர் அச்சுறுத்தலுக்குள் வாழும் மக்கள்!! (படங்கள்)

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வாரிகுட்டியுர் கிராமத்திற்கருகில் கல் அகழ்வு பணி நடைபெற்று வருகிறது.

வவுனியா சிங்கள பிரதேச சபைக்குட்பட்ட ரன்மித்கம என்ற பகுதியில் சுமார் 100 அடி ஆழம் வரை கற்பாறைகள் தோண்டபட்டு கற்கள் அகழப்பட்டுவருகின்றன.

பாறைகளை உடைப்பதற்காக சக்தி வாய்ந்த வெடி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் வெடித்து சிதறும் கருங்கற்கள் அருகில் அமைந்துள்ள கிராமத்தில் வசிக்கும் மக்களின் வீடுகளிற்குள் வந்து விழுகின்றது.

தொடர்ச்சியாக இவ்வாறு இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்றயதினம் மாத்திரம் 10 பேரது காணிகளிற்குள் பெரியளவிலான கற்கள் வந்து விழுந்துள்ளதுடன் நான்கு வீடுகளின்கூரைகள் சேதமடைந்துள்ளது.

சிங்கள பிரதேசசபைக்குட்பட்ட பகுதியில் கல் அகழ்வு இடம்பெற்ற போதிலும் அருகில் செட்டிகுளம் பிரதேச சபைக்குட்பட்ட கலைமகள் கிராம மக்களே வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இம் மக்கள் தமது பிரிவுக்குரிய பிரதேச சபையினரிடம் முறையிட்டுள்ளதுடன் அனைத்து அதிகாரிகளிற்கும் தெரியபடுத்திய நிலையில் தமக்கான நிரந்தரமான தீர்வை வழங்குவதற்கு அதிகாரிகள் முயற்சி மேற்கொள்ள வில்லை என்றும் இதனால் உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வாழ்வதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் சஜித் பிரேமதாசாவால் குறித்த கலைமகள் கிராமமம் திறந்து வைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டபோதிலும் குறித்த கிராமத்தில் தற்போது மக்கள் வசிப்பதற்கு பெரும் துன்பங்களை சந்தித்து வருகின்றர்.

இவ்விடயம் தொடர்பாக பார்வையிடுவதற்காக சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா உட்பட அவர்களது செட்டிகுளம் பிரதேச சபையின் தவிசாளர் ஆசீர்வாதம் அந்தோனி மற்றும் அவர்களது பிரதேச சபை உறுப்பினர்கள், சிறிரெலோ இளைஞரணியினரும் சென்றிருந்தனர்.

இதன்போது ப.உதயராசாவிடம் மக்கள் தமது பிரச்சினைகளை எடுத்துக்கூறியதும் சிங்கள பிரதேச சபையுடன் பேச்சுவார்த்தை ஒன்று செய்து உரிய தீர்வினை பெற்று தருவதாக ப.உதயராசா அவர்கள் மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

Comments (0)
Add Comment