சேலையூர் அருகே மாடியில் இருந்து வீசி சிறுமி படுகொலை – சித்தி கைது..!!!

சேலையூர் அருகே செம்பாக்கம் திருமலைநகரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் 2-வது மாடியில் வசித்து வருபவர் பார்த்தீபன். சாப்ட்வேர் என்ஜினீயர்.

இவரது முதல் மனைவி உடல்நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார். இவர்களது மகள் ராகவி (வயது6). அருகில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தாள்.

இந்த நிலையில் பார்த்தீபன் 2-வதாக சூரியகலா என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு 1½ வயதில் மகன் உள்ளான்.

நேற்று காலை பார்த்தீபன் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். சிறிது நேரத்தில் அவரது செல்போனில் தொடர்பு கொண்ட சூரியகலா, மகள் ராகவியை காணவில்லை என்று தெரிவித்தார்.

இதற்கிடையே சிறுமி ராகவி வீட்டின் அருகே உள்ள புதரில் காயத்துடன் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து சேலையூர் போலீசார் விசாரணை நடத்தினர். முதலில் 2-வது மாடியில் இருந்து விழுந்து சிறுமி இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் வீட்டின் மாடியில் இருந்து சில அடி தூரத்தில் உள்ள முட்புதரில் சிறுமியின் உடல் கிடந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மாடியில் இருந்து விழுந்தால் இவ்வளவு தூரத்துக்கு சிறுமியின் உடல் கிடக்க வாய்ப்பில்லை என்று போலீசார் கருதினர்.

எனவே சிறுமி ராகவியை மாடியில் இருந்து யாரேனும் வீசி கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தொடங்கினர்.

இது தொடர்பாக சிறுமியின் சித்தியான சூரியகலாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சிறுமி ராகவியை தாக்கி மாடியில் இருந்து வீசி கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து சூரியகலாவை போலீசார் கைது செய்தனர்.

பார்த்தீபன் 2-வதாக சூரியகலாவை திருமணம் செய்தபோது சிறுமி ராகவியை நல்லமுறையில் பார்த்து வந்துள்ளார். பின்னர் சூரியகலாவுக்கு மகன் பிறந்ததும் ராகவி மீதான பாசம் சிறிது சிறிதாக குறைய தொடங்கி உள்ளது. இந்த நிலையில் சூரியகலா 2-வதாக கர்ப்பம் அடைந்தார். இதனை பார்த்தீபன் கலைக்க கூறியதாக தெரிகிறது.

மேலும் 2 குழந்தைகள் உள்ளனர். அவர்களை பார்த்தால் போதும் என்று சூரியகலாவிடம் கூறி இருக்கிறார். கர்ப்பத்தை கலைக்க கூறியதால் சூரியகலாவுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

நேற்று காலை பார்த்தீபன் வேலைக்கு சென்றதும் சிறுமி ராகவியை தாக்கி 2-வது மாடியில் இருந்து தூக்கி வீசி உள்ளார். இதில் பலத்த காயம் அடைந்து ராகவி இறந்து விட்டார்.

பின்னர் இதுபற்றி தெரியாதது போல் சூரியகலா கணவரிடம் நாடகமாடினார். ராகவியை காணாமல் தேடியபோது சூரியகலாவும் ஒன்றும் தெரியாதது போல் தேடி இருக்கிறார்.

ராகவியின் உடலை பார்த்தீபன் பதட்டத்துடன் தூக்கி செல்லும்போதும் கதறியபடியே சூரியகலா சென்றார். இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

கர்ப்பத்தை கலைக்க கூறியதால் கணவரின் முதல் மனைவியின் மகளை 2-வதுமனைவி மாடியில் இருந்து வீசி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments (0)
Add Comment