சட்டவிரோதமாக குடியேறிய அனைவரும் வெளியேற்றப்படுவார்கள்: அமித்‌ஷா..!!!

பா.ஜனதா ஆளும் அரியானா மாநிலத்துக்கு 21-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜனதா தலைவருமான அமித்‌ஷா நேற்று அம்மாநிலத்தில் கைத்தால் என்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார்.

அதில் அவர் பேசியதாவது:-

சட்டவிரோதமாக குடியேறிய ஒவ்வொருவரையும் அவரவர் நாட்டுக்கே அனுப்ப வேண்டும் என்பதுதான் பா.ஜனதா அரசின் கொள்கை. ஏனென்றால் அவர்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். 2024-ம் ஆண்டு அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு உங்களிடம் ஓட்டு கேட்டு வரும்போது, சட்டவிரோதமாக குடியேறிய அனைவரும் வெளியேற்றப்பட்டு இருப்பார்கள்.

கா‌‌ஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை நீக்க முந்தைய அரசுகளுக்கு துணிச்சல் இல்லை. ஆனால், மோடி அரசு மீண்டும் பதவிக்கு வந்தவுடன் முதலாவது பாராளுமன்ற கூட்டத்தொடரிலேயே இதை செய்து காட்டியுள்ளது.

இது, பா.ஜனதாவின் சொந்த பிரச்சினை அல்ல, நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. எனவே, எல்லா கட்சிகளின் ஆதரவையும் எதிர்பார்த்தோம். ஆனால், காங்கிரஸ் கட்சியோ, பா.ஜனதா என்ன செய்தாலும் எதிர்க்கிறது.

370-வது பிரிவு நீக்கத்தை ஆதரிக்கிறாரா? இல்லையா? என்பதை ராகுல் காந்தி தெளிவுபடுத்த வேண்டும்.

வங்காளதேசம் உருவாக்கப்பட்டபோது, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை வாஜ்பாய் புகழ்ந்தார். ஏனென்றால் அது தேசநலன் சம்பந்தப்பட்டது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை விட குறைவான தடவையே பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார். ஆனால், மன்மோகன் சிங்கின் பயணம் தோல்வியில் முடிந்ததால், அது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

ரபேல் விமானத்துக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ‘சாஸ்திர பூஜை’ செய்ததை காங்கிரஸ் கட்சி குறை கூறுகிறது. இந்த ‘சாஸ்திர பூஜை’ பாரம்பரியத்தை தொடர வேண்டுமா? தொடரக்கூடாதா?

அரியானாவில் முன்பிருந்த அரசுகள், குண்டர் கலாசாரத்தையும். ஊழலையும் ஊக்குவித்தன. ஆனால், தற்போதைய பா.ஜனதா அரசு, ஊழலற்றதாக உள்ளது.

இவ்வாறு அமித்‌ஷா பேசினார்.

Comments (0)
Add Comment