150 ரெயில்கள், 50 ரெயில் நிலையங்களை தனியார்மயமாக்க சிறப்பு குழு அமைப்பு..!!

ரெயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், டெல்லி – லக்னோ வழித்தடத்தில் இயங்கும் தேஜாஸ் அதிவேக ரெயில் தனியார் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டது. தற்போது மேலும் 150 ரெயில்கள் மற்றும் 50 ரெயில் நிலையங்களை தனியாரிடம் ஒப்பந்த முறையில் ஒப்படைக்க உள்ளது.

இந்த பணிகளை மேற்கொள்வதற்காக உயர் அதிகாரம் கொண்ட சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது. இது தொடர்பாக நிதி ஆயோக் குழும தலைமை அதிகாரியான அமிதாப் காண்ட், இந்திய ரெயில்வே வாரிய தலைவரான வி.கே யாதவிற்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்த சிறப்பு குழுவில் யாதவ் மற்றும் அமிதாப் தவிர பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை செயலாளர் ஆகியோரும் இடம்பெறுவர் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து நிதி ஆயோக் குழு தலைவர் அமிதாப் கூறுகையில், “உலகத்தரம் வாய்ந்த ரெயில் நிலையங்களாக மாற்ற 400 ரெயில் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், சில முக்கிய ரெயில் நிலையங்களே முதலில் மேம்படுத்தப்படவுள்ளன. சமீபத்தில் ரெயில்வே அமைச்சருடன் மேற்கொண்ட விரிவான கலந்துரையாடலில், குறைந்தபட்சம் 50 ரெயில் நிலையங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று முடிவு செய்யப்பட்டது.

சமீபத்தில், ஆறு விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் பணிகளை மேற்கொள்ள சிறப்பு குழு அமைப்பது போன்றே இந்த விஷயத்திலும் காலவரையறை முறையில் பணிகளை மேற்கொள்ள குழு அமைக்கப்படும்.

முதல் கட்டமாக 150 பயணிகள் ரெயில்களை இயக்க தனியார் ரெயில் பணியாளர்களை அமர்த்த ரெயில்வே முடிவு செய்துள்ளதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்” என கூறினார்.

ரெயில்வே பொறியியல் வாரியம் மற்றும் ரெயில்வே போக்குவரத்து வாரியம் உறுப்பினர்களும் இந்த குழுவில் இடம்பெறுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

Comments (0)
Add Comment