பல்லாவரத்தில் பயங்கரம்.. பட்டாக் கத்தியுடன் சட்ட மாணவர்கள் மோதல்.. ஒருவர் படுகாயம்! (வீடியோ, படங்கள்)

பட்டா கத்தி, அரிவாளுடன் கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்டதால் திரும்பவும் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரூட் தல விவகாரத்தில் போலீசார் செய்த கெடுபிடியால் இப்போதுதான் மாணவர்கள் அடங்கி உள்ளதாக நினைத்தால், திரும்பவும் ஆரம்பித்து விட்டார்கள். கல்லூரி மாணவர்கள் பஸ் தவிர, ரயில்களிலும் காலேஜிக்கு வந்து போவார்கள். அப்படி வரும்போது, கத்தி, அருவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடனே ரயிலில் பயணம் செய்வார்கள்.

அந்த சமயங்களில் ஆயுதங்களை தரையில் தேய்த்து சத்தம் எழுப்பியும், கூச்சலிட்டும் பயணிகளுக்கும், பெண்களுக்கும் இடையூறு ஏற்படுத்துவதையும் வழக்கமாக கொண்டிருப்பர். இது சம்பந்தமான வீடியோக்கள் வெளியாகியதுடன், போலீசாரும் இவர்களை கட்டுப்படுத்தி வைத்திருந்தனர். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பஸ்சுக்குள்ளேயே மோதி கொண்டனர். நடு ரோட்டில் அரிவாள் வெட்டும் நடந்தது. இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அதனால் சென்னை போலீசாரும் கல்லூரி மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து, கடுமையாக எச்சரித்தே வைத்திருந்தனர்.

இப்போது மீண்டும் பட்டாக்கத்தியால் வெட்டி கொண்டுள்ளனர். பல்லாவரம் கல்லூரி மாணவர்கள் இடையே இந்த சண்டை எழுந்துள்ளது. இவர்கள் வேல்ஸ் பல்கலைக்கழக சட்ட மாணவர்கள் என்று கூறப்படுகிறது. அஷ்வின் என்ற மாணவரை சக மாணவர் கார்த்தி கணேஷ் பட்டா கத்தியால் வெட்டி விட்டாராம். இதுதான் பிரச்சனையாக வெடித்துள்ளது. பதிலுக்கு மற்றொரு மாணவர் கும்பலும் கத்தியால் வெட்டி உள்ளனர். மாணவர்களிடையே இப்படி ஒரு மோதலை கண்டதும் பொதுமக்கள் பீதியிலும், கலக்கத்திலும் உறைந்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Comments (0)
Add Comment