வீதி பாதுகாப்பு வாரம்; யாழ்ப்பாணத்தில் நாளை பேரணி!!

வட மாகாண வீதிப் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு நாளை காலை 9 மணிக்கு ஆளுநர் செயலகத்திலிருந்து யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானம் வரையில் நடைபவனி இடம்பெறவுள்ளது.

அத்துடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அமைந்துள்ள புனர்வாழ்வு நிலைய கட்டடத்தின் முதலாம் மாடியில் ‘குருதியை தானம் செய்யுங்கள் வீதியில் அல்ல’ என்னும் தொனிப்பொருளில் நாளை காலை 8.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணிவரை குருதிக்கொடை முகாமும் இடம்பெறவுள்ளது.

ஆளுநர் செயலகம், வீதி பாதுகாப்பு சபை மற்றும் வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபை ஆகியன இணைந்து நடாத்தும் இந்த வீதிபாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு வட மாகாணத்தின் சகல மாவட்டங்களிலும் நாளை காலை 9.00 மணிக்கு அரச அதிபர்கள் தலைமையில் இந்த நடைபவனி ஆரம்பமாகவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் பேரணி மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் இடம்பெறுகிறது.

வடமாகாணத்தில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் நடைபெறும் இந்த வீதி பாதுகாப்பு வாரத்தின் போது, வடக்கு முழுவதும் பல்வேறு மட்டங்களில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் முகமாக வீதி நாடகங்கள் பாடசாலை மட்டப் பேச்சு போட்டிகள் , பாடசாலைகளில் மாணவ போக்குவரத்து பிரிவினை அமைத்தல், குறுந்திரைப்படம் மற்றும் துணுக்குகள் உருவாக்கம், சிறந்த வாகன ஓட்டுனர்களை தெரிவு செய்து அவர்களை கௌரவித்தல்,

விபத்துக்கள் குறைந்த பொலிஸ் நிலையங்களை தெரிவு செய்தல், அரச அலுவலர்களுக்கான இலவச உடற்தகுதி மருத்துவ பரிசோதனை மற்றும் வடமாகாணத்தில் விபத்துக்கள் அதிகமான இடங்களை இனங்கண்டு அவ்விடங்களில் போக்குவரத்து பொலிஸாரின் மாதிரிகளை காட்சிப்படுத்துவது உள்ளிட்ட பல விழிப்புணர்வு செயற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

இந்த நடைபவனியில் வீதி பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர், வடமாகாண போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் , வீதி அபிவிருத்தி திணைக்களத்தலைவர் , மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் , வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

மேலும் இந்த நிகழ்வினை முன்னிட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அமைந்துள்ள புனர்வாழ்வு நிலைய கட்டடத்தின் முதலாம் மாடியில் ‘குருதியை தானம் செய்யுங்கள் வீதியில் அல்ல’ என்னும் தொனிப்பொருளில் நாளை காலை 8 மணி முதல் பிற்பகல் 4 மணிவரை குருதிக் கொடை முகாம் இடம்பெறவுள்ளது.

கடந்த 7ஆம் திகதி ஆரம்பமான வடமாகாண வீதிபாதுகாப்பு வாரமானது எதிர்வரும் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

Comments (0)
Add Comment