வறுமையால் மனவேதனை- நட்புக்காக தற்கொலைக்கு முயன்ற நண்பன்..!!

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு மேலையூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மனைவி லதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் தங்கராசுவும், லதாவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர்.

இதனால் தங்கராசுவின் மூத்த மகன் கூலி வேலை செய்து தம்பி குருநாத்தை (வயது 18) ஒரத்தநாடு அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. படிக்க வைத்தார்.

இந்த நிலையில் குருநாத்துக்கும், கண்ணந்தங்குடி கீழையூரை சேர்ந்த துரைக்கண்ணு மகன் சாமுவேல் (18) என்பவரும் இடையே இணைபிரியாத நண்பர்கள் ஆவர். பெற்றோர் இல்லாததால் போதிய பணம் இல்லாத நிலையில் கல்லூரியில் படிக்க குருநாத் மிகவும் சிரமப்பட்டு வந்தார். மேலும் தனது அண்ணன் கஷ்டப்பட்டு தன்னை படிக்க வைப்பதை நினைத்து மனம் வருந்தினார். இதுகுறித்து தனது மனஉளைச்சலை நண்பன் சாமுவேலிடம் அடிக்கடி பகிர்ந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற குருநாத், வகுப்பறையில் வைத்து பூச்சிமருந்தை குடித்தார். இதை நேரில் பார்த்த சாமுவேல், தனது நண்பன் தற்கொலை முயற்சியை தாங்கி கொள்ள முடியாமல் வேதனையில் குருநாத் கையில் வைத்திருந்த மீதமிருந்த வி‌ஷத்தை பிடுங்கி குடித்தார். இதனால் இருவரும் சிறிதுநேரத்தில் மயங்கி கீழே விழுந்தனர்.

இதையடுத்து கல்லூரி பேராசிரியர்கள், சக மாணவர்கள் உதவியுடன் மயக்கம் அடைந்த இருவரையும் ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Comments (0)
Add Comment