சோபாலபுளியங்குளத்தில் விவசாய நடவடிக்கைக்கு பொலிசார் தடை!! (படங்கள்)

வவுனியா சோபாலபுளியங்குளத்தில் மக்களின் விவசாய நடவடிக்கைக்கு பொலிசார் தடை விதித்ததால் பதற்ற நிலை:!!

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சோபாலபுளியங்குளம் பகுதியில் நெற் பயிர்செய்கை நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழ் மக்களுக்கு பூவரசன்குளம் பொலிசார் தடையை ஏற்படுத்தியமையால் பதற்ற நிலை ஏற்பட்டது.

இன்று மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா பிரதேச செயலகபிரிவுக்குட்பட்ட சோபாலபுளியங்குளம் கிராமத்தில் 78 தமிழ் குடும்பங்கள் பூர்வீகமாக வாழ்ந்து வருகின்றனர். அந்த மக்கள் விவசாயம் செய்து வந்த அரச நிலப்பகுதி யுத்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்தமையால் கைவிடப்பட்டிருந்தது. மீண்டும் மக்கள் குடியேறிய நிலையில் அப்பகுதியில் அரசாங்கத்திற்கு சொந்தமான 40 ஏக்கர் வரையிலான விவசாய நிலத்தில் நெற் செய்கையில் ஈடுபட்டு வந்தனர். அத்துடன் குறித்த காணியை தமது வாழ்வாதார பயிற்செய்கைக்காக வழங்குமாறு அம் மக்கள் பிரதேச செயலாளர், அரச அதிபர், மக்கள் பிரதிநிதிகள், வடமாகாண ஆளுனர் ஆகியோரிடம் கோரியும் இருந்தனர்.

இருப்பினும், அருகில் குடியேறியிருந்த சகோதர இனத்தவர்கள் குறித்த காணியை தாம் கையகப்படுத்த முயன்றமையால் அக்காணி அரசியல் தலையீடு காரணமாக தமிழ் மக்களுக்கு வழங்கப்படாத நிலையில் இருந்தது. இந்நிலையில் இன்று (13.10) அப்பகுதி தமிழ் மக்கள் தரணிக்குளத்தின் கீழான தாம் செய்கை பண்ணி வந்த குறித்த 40 ஏக்கர் நெற்செய்கை நிலத்தில் பயிற் செய்கையில் ஈடுபட்டனர். இதன்போது அங்கு வந்த பூவரசன்குளம் பொலிசார் குறித்த காணியில் பயிர்செய்கை மேற்கொள்ள தடைவிதித்துடன், மக்களை அவ்விடத்தில் இருந்து வெளியேறுமாறும் கோரினர்.

ஆனாலும், மக்கள் அவ்விடத்தில் இருந்து வெளியேறாது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இதனையடுத்து குறித்த இடத்திற்கு சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலந்துரையாடலை மேற்கொண்டதுடன், குறித்த காணிகள் அப்பகுதி தமிழ் மக்கள் விவசாயம் செய்த நிலங்கள் எனத் தெரிவித்து அவர்களை தொடர்ந்தும் பயிற்செய்கையில் ஈடுபடுமாறு தெரிவித்தார். இதனையடுத்து பொலிசார் அங்கிருந்து வெளியேறிய நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் முன்னிலையில் மக்கள் நெற் செய்கையில் ஈடுபட்டனர்.

அத்துடன், தமது வாழ்வாதாரத்திற்காக குறித்த விவசாய காணியை பெற்றுத்தர உரிய அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அம் மக்கள் கோரினர்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

Comments (0)
Add Comment