வட. பண்பாட்டு பெருவிழாவில் வெறிச்சோடிக் காணப்பட்ட கதிரைகள்!! (படங்கள்)

வடமாகாண பண்பாட்டு பெருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வில் வெறிச்சோடிக் காணப்பட்ட கதிரைகள்

வடமாகாண பண்பாட்டு பெருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வில் பலரும் கலந்து கொள்ளாமையால் மண்டபத்தில் கதிரைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

வடமாகாண பண்பாட்டு பெருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நேற்று காலை, மாலை என இரு அமர்வுகளாக இடம்பெற்றது. இரண்டாம் நாள் நிகழ்வின் மாலை அமர்வில் பிரதம அதிதியாக வடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.

முன்னதாக வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் முன்பாக ஆரம்பமாகிய கலை, பண்பாட்டு அம்சங்களை தாங்கிய ஊர்வலம் மணிக்கூட்டு கோபுர சந்தியை அடைந்து, புகையிரத நிலைய வீதியூடாக சென்று சைவப்பிரகாச மகளிர் கல்லூரி பிரதான வீதியூடாக நகரசபை கலாசார மண்டபத்தை அடைந்தது.

மண்டபத்தில் அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றது. இதன்போது சிறப்பு பட்டிமன்றம், கவியரங்கம், நாட்டிய நடனம், பரதநாட்டியம், கலை நிகழ்வுகள், சிறந்த நூற்பரிசு வழங்கள், மூத்த கலைஞர்களுக்கு விருதுவழங்கல் உள்ளிட்ட பல நிகழ்வுகள் இடம்பெற்றன.

ஆனாலும், வடமாகாணத்திற்குரிய நிகழ்வு என்ற போதும் நிகழ்வு மண்டபமானது வெற்றுக் கதிரைகளுடன் காட்சியளித்தது. குறைந்தளவிலான கலைஞர்களே நிகழ்வில் கலந்து கொண்டனர். நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவின் கலைஞர்களுக்கிடையிலான பாரபட்சம், திட்டமிட்ட ஒழுங்கமைப்பு இன்மை என்பன காரணமாக மண்டபம் சோவையிழந்து பிரதேச பண்பாட்டு விழாவை விட குறைந்த அளவிலான மக்களுடன் காணப்பட்டது.

பெருமளவு நிதியில் செய்யப்பட்ட இப் பண்பாட்டு விழாவானது ஒரு திட்டமிடல் இன்றி நடைபெற்றமை கலைஞர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிகழ்வில், வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் உதவிப்பணிப்பாளர் சுஜீபா சிவதாஸ், முன்னாள் துணைவேந்தர் நா.சண்முகலிங்கம், வடக்கு கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன், கலைஞர் வேல் ஆனந்தன், ஓய்வு நிலை சிரேஸ்ட விரிவுரையாளர் மு. கௌரிகாந்தன் என பலர் கலந்துகொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

Comments (0)
Add Comment