வவுனியாவில் விவசாயிகளின் உயிருக்கு ஆபத்தினை ஏற்படுத்தும் திணைக்களம்!! (படங்கள்)

வவுனியாவில் விவசாயிகளின் உயிருக்கு ஆபத்தினை ஏற்படுத்தும் திணைக்களம் : ஆளுனரால் திறந்து வைப்பு

வடமாகாண ஆளுனர் அவர்களால் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தில் சீரற்ற மின் விநியோகம் காரணமாக அங்கு சென்று வரும் விவசாயிகள் அச்சத்துடனேயே சென்று வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பணிமனையானது 33 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு இம்மாதம் 6 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. இப் பணிமனைக்கான மின்சார விநியோகம் ஆனது சீராக வழங்கப்படாது வயர்கள் ஊடாக மதில் சுவர் மற்றும் நிலத்தில் புதைத்து பாதுகாப்பற்ற முறையில் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதனால் மழை நேரத்தில் அப்பகுதியில் மின்சாரக் கசிவு ஏற்படக் கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் பலரும் அங்கு தமது தேவை நிமிர்த்தம் வந்து செல்லும் போது அச்சத்துடனேயே வந்து செல்ல வேண்டி நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த பணிமனையில் மக்கள் நடமாடும் பகுதியிலேயே சீரற்ற வகையில் மின் விநியோகிக்கப்படுகிறது. இதனால் ஏற்டபடக் கூடிய ஆபத்தை தடுக்கும் வகையில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரியுள்ளனர்.

இதேவேளை, குறித்த பணிமனை திறப்பு விழாவின் போது வேலைகளை பூரணப்படுத்தாது அவசரமாக ஏன் குறித்த பணிமனை திறக்கப்படுகிறது என வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளரிடம் வடமாகாண ஆளுனர் கேள்வி எழுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்ட போதும், அவர்கள் இது தொடர்பில் பதில் அளிக்கவில்லை.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

Comments (0)
Add Comment