மரடு குடியிருப்பு வழக்கு: கட்டுமான நிறுவன இயக்குனர்- முன்னாள் அரசு அதிகாரிகள் 2 பேர் கைது..!!!

கேரள மாநிலம் கொச்சியை அடுத்த மரடு கடற்கரை பகுதியில் 4 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. 4 அடுக்குமாடி குடியிருப்புகளும் மத்திய கடற்கரை ஒழுங்குமுறை விதிகளுக்கு மாறாக கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மரடில் கட்டப்பட்டுள்ள 4 அடுக்குமாடி குடியிருப்புகளையும் இடித்து அகற்ற உத்தரவு பிறப்பித்தது.

மரடு அடுக்குமாடி குடியிருப்புகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அவர்கள் தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மேலும் அரசின் விதிகளை மீறி மரடுவில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அனுமதி வழங்கிய அதிகாரிகள், கட்டுமான நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு தரப்பினர் முறையிட்டனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு அரசின் விதிகளை மீறி அடுக்குமாடி குடியிருப்பு கட்டிய நிறுவனத்தினர், அதற்கு அனுமதி வழங்கிய அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தது.

மேலும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தோருக்கு இடைக்கால இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான நிறுவனத்தினர் மீது கேரள குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

முதல் கட்டமாக ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான நிறுவன இயக்குனர் சானி பிரான்சிஸ் நேற்று கைது செய்யப்பட்டார்.

இதுபோல கட்டுமான பணிகளுக்கு அனுமதி வழங்கிய மரடு பஞ்சாயத்து முன்னாள் செயலாளர் முகம்மது அ‌ஷரப், ஜூனியர் என்ஜினீயர் ஜோசப் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது நம்பிக்கை மோசடி, கூட்டுச்சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இன்று இவர்கள் மூவாற்று புழா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள்.

கட்டுமான நிறுவன இயக்குனர் மற்றும் முன்னாள் அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டது பற்றி கேரள குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி. டோமின் தச்சங்கிரி கூறியதாவது:-

மரடுவில் விதிமீறி அடுக்குமாடி குடியிருப்பு கட்டியது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை பாயும்.

அரசியல் பிரமுகர்களுக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தால் அவர்களையும் கைது செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மரடுவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான நிறுவன இயக்குனர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இன்னொரு அடுக்கு மாடி குடியிருப்பு நிறுவனர் கோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இதுபோல மரடு பஞ்சாயத்து அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகளும் இப்போது கலக்கத்தில் உள்ளனர்.

மரடு பஞ்சாயத்து இப்போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment