பிரதமர் மோடிக்காக மரங்கள் வெட்டியதை நியாயப்படுத்தும் ஜவடேகர்..!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் 24-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அனைத்து கட்சிகளும் முழுவீச்சில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தின் அகோலா மாவட்டத்தில் இன்று பிரதமர் மோடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். புனே நகரில் உள்ள சர் பரசுராம் கல்லூரியில் நாளை நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். இதற்காக கல்லூரி வளாகத்தில் இருந்த ஒரு சில மரங்கள் வெட்டப்பட்டன. இந்த மரங்கள் வெட்டப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், பிரதமர் மோடி வருகைக்காக மரங்கள் வெட்டப்பட்டது சரிதான் என மத்திய சுற்றுச்சூழல் மந்திரி ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜவடேகர் கூறுகையில், சில சமயம் இம்மாதிரியான நிகழ்வுகளுக்காக மரங்கள் வெட்டப்படுகின்றன, ஆனால் அதைவிட அதிக மரங்கள் நடப்படுகின்றன. இதற்கு முன்பு இருந்த (காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ்) ஆட்சியிலும் இதே போன்று நடந்துள்ளது.

மோடியின் தேர்தல் பேரணிக்கு மரங்களை வெட்டுவதில் ஏன் இவ்வளவு பிரச்சனை வருகிறது? முந்தைய பிரதமர்கள் மற்றும் பிற தலைவர்கள் பேரணிகளுக்காக மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. ஆனால் அப்போது அத்தகைய விழிப்புணர்வு இருந்ததில்லையே!

ஒவ்வொரு முறையும் மரங்களை வெட்டும் போது அதைவிட அதிகமான மரங்களை நடுகிறோம். இதுவே வனத்துறையின் விதிமுறையாகும், என தெரிவித்தார்.

புனே மாநகராட்சியின் அனுமதியின்றி திங்கள்கிழமை இரவு சுமார் 25 சுபாபுல் மரங்கள் வெட்டப்பட்டதாக காங்கிரஸ் கூறிய நிலையில், மாணவர்கள் பாதுகாப்பு கருதி, சில மரங்களில் ஒடிந்து விழும் நிலையில் இருந்த சற்று பெரிய கிளைகளே வெட்டப்பட்டன என கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment