காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் திட்டம் – உளவுத்துறை புதிய எச்சரிக்கை..!!!

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி ரத்து செய்தது.

அதோடு காஷ்மீர் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அறிவித்தது. இதனால் காஷ்மீரில் இதுவரை நிலவி வந்த பயங்கரவாத பிரச்சினை அடங்க தொடங்கி உள்ளது.

சிறப்பு அந்தஸ்து பறிபோனதால் காஷ்மீர் அரசியல் தலைவர்களும், பிரிவினைவாதிகளும் கடும் கோபத்தில் உள்ளனர். அவர்கள் பயங்கரவாதிகளை தூண்டி விட்டு கலவரத்தை உருவாக்கக் கூடும் என்பதால் கடந்த 2 மாதமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டு இருந்தன.

தற்போது அவை கொஞ்சம் கொஞ்சமாக விலக்கப்பட்டு விட்டன. மக்கள் மத்தியில் சகஜநிலை ஏற்பட்டு விட்டது. இதனால் ஆத்திரம் அடைந்துள்ள பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட தொடங்கி உள்ளனர்.

நேற்று அனந்தநாக் மாவட்டத்தில் 3 ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

இந்த நிலையில் காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் மிகப்பெரிய தாக்குதல் திட்டத்துடன் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. காஷ்மீரில் உள்ள இந்திய விமானப்படை தளங்களையும், பஞ்சாப்பில் உள்ள முக்கிய ராணுவ முகாம்களையும் குறி வைத்து பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக அந்த எச்சரிக்கை தகவலில் கூறப்பட்டு இருக்கிறது.

காஷ்மீருக்குள் மொத்தம் 8 பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாகவும் அவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த 8 பயங்கரவாதிகளும் பாகிஸ்தானில் பல்வேறு பயிற்சிகளை பெற்ற தற்கொலை படை பயங்கரவாதிகள் என்றும் உளவுத்துறை கூறி உள்ளது.

கடந்த மார்ச் மாதம் இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் ஊடுருவி பாலகோட் பயங்கரவாதிகள் பயிற்சி முகாமை அழித்தது. புதுப்பிக்கப்பட்ட அந்த முகாமில்தான் இந்த 8 பயங்கரவாதிகளும் பயிற்சி பெற்று வந்து இருப்பதாக உளவுத்துறை கூறி உள்ளது.

காஷ்மீரில் விமானப்படை தளத்தை மட்டுமின்றி பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும் பயங்கரவாதிகள் கை வரிசை காட்டக்கூடும் என்று உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து காஷ்மீரில் மீண்டும் ராணுவ பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் இருந்து சுமார் 100 பயங்கரவாதிகளை காஷ்மீருக்குள் அனுப்ப பாகிஸ்தான் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பதை உளவுத்துறை கண்டறிந்துள்ளது. அந்த பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்த எல்லைப் பாதுகாப்பு படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment