துப்பாக்கி முனையில் வங்கியில் ரூ.13 லட்சம் கொள்ளை- உ.பி.யில் துணிகரம்..!!!

உத்தர பிரதேசம் மாநிலத்தின் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஆனந்தா நகரில் ஹெச்.டி.எப்.சி வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இன்று மதியம் இந்த வங்கிக்குள் நுழைந்த மர்ம நபர்கள் 13 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுதொடர்பாக போலீசார் தெரிவிக்கையில், இன்று மதியம் 12.30 மணியளவில் ஹெல்மெட் அணிந்த 4 நபர்கள் வங்கியின் உள்ளே வந்துள்ளனர், அவர்கள் நேரடியாக கேஷ் கவுண்டர் உள்ளே சென்று நாட்டுத் துப்பாக்கியை காட்டி அங்கிருந்த பணத்தை பைகளில் நிரப்பினர். பின்னர் தாங்கள் வந்த இருசக்கர வாகனங்களில் தப்பிச் சென்றுள்ளனர்.

கண்காணிப்பு கேமராவில் பதிவாகாமல் இருக்க ஹெல்மெட் அணிந்து உள்ளே வந்துள்ளனர். கொள்ளையர்களின் உருவம், உயரம் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களை தேடி வருகிறோம். இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தனர்.

பட்டப்பகலில் வங்கியில் நுழைந்து 13 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த சம்பவம் உ.பி.யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)
Add Comment