வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கம் வரவேற்பு!!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்க நிர்வாகக் கூட்டம் நேற்றுச் சனிக்கிழமை(19) மட்டக்களப்பில் இடம்பெற்றது.

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த்தேசியக் கட்சிகளின் வகிபாகம் தொடர்பான யாழ் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் உடன்படிக்கை இதன்போது ஆராய்ந்து விவாதிக்கப்பட்டதுடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் அனைத்து மாவட்ட உறுப்பினர்களும் இதனை ஏகமனதாக ஏற்றுக் கொள்வதெனவும் தீர்மானித்துள்ளனர்.

மேலும் வட-கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் உடன்படிக்கை பிரிந்து நின்று பேரம் பேசும் சக்தியை இழந்து நிற்கும் அரசியல் கட்சிகளை ஒன்றாக்கியுள்ளதை வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் சங்கம் வரவேற்றுள்ளதுடன் இதேபோன்று தமிழ்மக்களின் அடிப்படை உரிமைப் பிரச்சினைகளிலும் ஒன்றாக நின்று தமிழ்த்தேசியக்கட்சிகள் போராட வேண்டுமெனவும் அழைப்பு விடுத்தனர்.

இதேவேளை, குறித்த கூட்டத்தில் வட-கிழக்கிலுள்ள எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கத்தின் உறுப்பினர்களும், கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

Comments (0)
Add Comment