கஜன் மற்றும் சுலக்சனின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்!! (படங்கள்)

யாழ்ப்பாண பொலிசாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகொலையான யாழ்.பல்கலை கழக மாணவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

மாணவர் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்களின் உருவ படங்களுக்கு மலர் மாலை அணிவித்து , மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டன.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன் மற்றும் நடராஜா கஜன் ஆகியோர் கடந்த 2016ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20ஆம் திகதி நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்த போது, கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் வைத்து அவர்கள் மீது பொலிசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் அவர்கள் இருவரும் உயிரிழந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் அன்றைய தினம் அங்கு கடமையில் இருந்த ஐந்து பொலிசாரையும் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தினர்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து மூவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு அரச தரப்பு சாட்சிகளாக மாற்றப்பட்டனர்.

கடமைக்கு பொறுப்பான முதலாவது சந்தேக நபரும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட மூன்றாவது சந்தேக நபருக்கும் எதிராக இலங்கை குற்றவியல் நடைமுறை சட்டக்கோவையின் 296ஆம் பிரிவின் கீழான கொலைக் குற்றச்சாட்டின் கீழ் பிராது பத்திரத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் யாழ்.நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்தனர்.

அதனை தொடர்ந்து சந்தேகநபர்கள் இருவருக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்ட கொலைக் குற்றச்சாட்டுப் பத்திரத்தின் மீது முன்வைக்கப்பட்ட சான்று ஆதாரங்களில் மன்று திருப்தியடைகின்றது. அதனால் அவர்கள் இருவருக்கும் எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மன்று கட்டளையிடுகின்றது.

அதற்காக சுருக்கமுறையற்ற விசாரணைகளின் வழக்கு ஆவணங்களை சட்ட மா அதிபருக்கு பாரப்படுத்த மன்று பணிக்கின்றது. அத்துடன், சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் வழங்கப்பட்ட பிணையில் விடுவிக்கப்படுகின்றனர்” என யாழ் நீதிவான் நீதிமன்ற நீதவான் ஏ.எஸ்.பீற்றர் போல் கடந்த ஜூன் 27ஆம் திகதி கட்டளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

Comments (0)
Add Comment