பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு மரண தண்டனை!!

பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டம் ஒன்றை தமது ஆட்சியில் கொண்டு வருவதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அக்குரண நகரில் நேற்று (19) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், எமது நாட்டில் எந்தவொரு பயங்கரவாத செயற்பாடுகளுக்கும் இடமில்லை. ஜாதி, மத மற்றும் குல பேதங்களுக்கு அப்பாற்பட்ட பயங்கரவாதத்திற்கு எமது தாய் நாட்டில் ஒருபோதும் இடமில்லை.

பயங்கரவாதத்தை ஒழிப்பதாக கூறி குறிப்பிட்ட ஒரு மதத்தை அழிக்க முற்படுவதில்லை. இனவாதத்தையும், மதவாதத்தையும் தோற்றுவித்து நாட்டுக்கு தீவைக்கும் செயற்பாட்டை நாட்டு பற்று என கூற முடியுமா?

அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ வழி செய்ய வேண்டும் என்பதே புத்தபெருமானின் போதனையாகும். நாட்டில் இருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்கும் செயற்பாட்டை முன்னெடுக்க பீல்ட் மார்சல் சரத் பொன்சேக்காவுக்கு முழு சுதந்திரத்தையும் வழங்கியுள்ளேன்.

30 வருட யுத்தத்தை முன்னெடுத்து புலிகளை தோற்கடித்த அவருக்கு மீண்டும் நாட்டில் உள்ள அனைத்து பயங்கரவாத அமைப்புகளையும் ஒழிக்க சந்தர்ப்பம் வழங்கியுள்ளேன்.

பயங்கரவாதத்திற்கு நமது நாட்டில் இடமில்லை. மேலும் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு மரண தண்டனை வழங்கும் கட்டளை சட்டம் ஒன்றை கொண்டுவர தீர்மானித்துள்ளேன்.

இதுபோன்ற வளமான நாட்டில் உறுதியான அரசாங்கம் ஒன்றை உருவாக்க வேண்டும்.

ஆனால் மக்கள் பலம் இல்லாத ஒரு பிரிவினர் மக்களின் உயிர்களையும், சொத்துக்களையும் அழிக்க முற்பட்டால் அவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பம் அளிக்கப்படாது. அத்துடன் அவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒத்தாசை வழங்குவோருக்கும் நாட்டில் வாழ சந்தர்ப்பம் அளிக்கப்படாது.

எனவே, பயங்கரவாதத்தை ஒழிப்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். ஆகவே நாட்டில் இன மற்றும் மத முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கு பிரேமதாசவின் மகன் என்ற வகையில் நான் அனுமதி வழங்க போவதில்லை´ என்றார்.

Comments (0)
Add Comment