வவுனியாவில் டெங்கு நுளம்பு மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

வவுனியாவில் வர்த்தக நிலையங்கள் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது! மாவட்ட பொது சுகாதாரப் பரிசோதகர்.

மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

வவுனியா நகரப்பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்கள் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது என மாவட்ட பொது சுகாதாரப் பரிசோதகர் க.தியாகலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரப்பகுதியில் டெங்கு நோயின் திடீர் பரம்பல் காணப்பட்டது. அதனை தொடர்ந்து வவுனியா பொது வைத்தியசாலையில் 46 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். குறிப்பாக வவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்கள் அதிகளவாக டெங்கு தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
டெங்குத்தாக்கத்திற்கு உள்ளானவர்களில் 33 பேருக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் நகர்பகுதிகளில் பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டவர்கள் டெங்கு தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு மாணவர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதாரப் பரிசோதகர்கள் ஒன்பது பேரும் ஐந்து உதவியாளர்களும், பத்து குடும்பநல உத்தியோகத்தர்களும், ஆறு சுகாதாரப் பணி உதவியாளர்களும் டெங்கு ஒளிப்பு நடவடிக்கையில் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளார்கள்.

வவுனியா நகரப்பகுதியில் 170 இடங்களில் நுளம்புகளின் குடம்பிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்ட்டு அது டெங்கு நுளம்பு என பூச்சி ஆய்வாளர்களினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நகரப்பகுதியில் கடைகளில் பணியாற்றுபவர்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். சுகாதரப்பரிசோதகர்கள் நுளம்பு உள்ள இடங்களை கண்டுபிடித்து அவற்றை மாற்றம் செய்துள்ள போதும் டெங்கு நுளம்புகள் அதிகளவாக கடைகளுக்குள்ளே இருப்பதை எமது சுகாதாரப் பரிசோதகர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

இப்போழுது தீபாவழி நெருங்கி வருகின்றமையால் டெங்கு தாக்கம் பாரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. கடைகளுக்குள் டெங்கு நுளம்புகள் அதிகளவாக இருப்பதால் நோயாளிகள் அதிகரிப்பதற்கு வாய்ப்புக்கள் இருக்கிறது.
ஆகவே பொதுமக்களுக்கு சுகாதாரத்திணைக்களம் வேண்டுகோள் ஒன்றை விடுக்கிறது. நகர்ப்பகுதிக்கு வரும் பொதுமக்கள் நீளமான தடித்த இறுக்கமற்ற உடைகளை அணிந்து வருவதன் மூலம் நுளம்பு கடியிலிருந்து தங்களை பாதுகாக்க முடிவதுடன், நகர் பகுதிக்க வரும் பொது மக்கள் குறிகிய காலப்பகுதியில் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து நகரை விட்டு வெளியேறி அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன் பாடசாலை மாணவர்கள் மாலை நேர வகுப்பிற்கு செல்லும்போது நீளமான தடித்த உடைகளை அணிவதன் மூலம் நுளம்பு கடியிலிருந்து மாணவர்களையும் பாதுகாத்து கொள்ள முடியும். அத்துடன் தனியார் கல்வி நிறுவனங்கள் காலைநேர மற்றும் மாலைநேர வகுப்புக்களில் நுளம்புத்திரிகளை பாவிக்க வேண்டும்.

பொதுமக்கள் தினமும் தாங்கள் வசிக்கும் சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக குளிர்சாதனப்பெட்டியின் பின் பகுதிகள், தண்ணீர் தொட்டிகள், பூச்சாடி தொட்டிகள், கிணறுகள், கைவிடப்பட்ட மலசல கூடங்கள் நுளம்பு பெருகும் இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அத்துடன் டெங்கு நுளம்பு பரவாமல் இருக்க சகலரும் கிணறுகளில் மீன் வளர்க வேண்டும் அதற்கான மீன்களை எமது மலேரியா தடை இயக்கம் மக்களுக்கு தேவையான அளவு வழங்குவதற்கு தயாராக இருக்கிறது.

டெங்கு கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் 27 பேருக்கு நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது அதிலே ஒருவருக்கு 25 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. இரண்டு பேருக்கு திறந்த பிடியாணை வழங்கப்பட்டுள்ளது. ஐந்து பேருக்கு ஐம்பதினாயிரம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

இனி வரும் காலத்தில் நுளம்பு பெருக்க சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க இருப்பதனால் 50 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அல்லது ஆறு மாதத்திற்கு குறையாத சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதால் பொதுமக்கள் தங்கள் சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு பிராந்திய சகாதாரத்திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

Comments (0)
Add Comment