திருப்பதி கோவிலில் மலைபோல் குவிந்த நாணயங்கள்- 3 மாதத்தில் ரூ.26 கோடியை மாற்றியது நிர்வாகம்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகிறார்கள். பக்தர்கள் காணிக்கையாக பணம், தங்க நகைகள் போன்றவற்றை உண்டியலில் செலுத்தி வருகிறார்கள். இதன் மூலம் ஆண்டுக்கு திருப்பதி தேவஸ்தானத்துக்கு சுமார் ரூ.1200 கோடிக்கு வருவாய் கிடைக்கிறது. இதனால் நாட்டின் பணக்கார கோவிலாக திருப்பதி ஏழுமலையான் கோவில் திகழ்கிறது.

பக்தர்கள் நாணயங்களையும் காணிக்கைகளாக உண்டியலில் செலுத்துகிறார்கள். அதனை பிரித்து எடுக்கும் திருப்பதி தேவஸ்தானம் மூட்டை மூட்டையாக கட்டி வைத்துள்ளனர். அவைகளை சிறிய அறையில் வைத்துள்ளனர். ஆண்டுக்கு ஆண்டு நாணயங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஆனால் சில்லரை காசுகளை மாற்ற முடியாமல் தேவஸ்தானம் திணறியது. 85 ஆயிரம் பைகளில் ரூ.25.82 கோடிக்கு நாணயங்களை மாற்ற முடியாமல் இருப்பு வைத்திருந்தது. நாணயங்களை வாங்க வங்கிகள் தயக்கம் காட்டியதால் அதை எப்படி மாற்றுவது என்று தேவஸ்தானம் ஆலோசனை நடத்தி வந்தது. தேவஸ்தான கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி தலைமையில் வங்கி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது நாணயங்களை பெற்றுக்கொள்ள வங்கிகள் முன்வந்தன.

அதன்படி ஆகஸ்டு 4-ந்தேதி முதல் அக்டோபர் 19-ந்தேதி வரை திருப்பதி தேவஸ்தானம், 70 ஆயிரம் பைகளில் உள்ள நாணயங்களை ரூபாய் நோட்டுகளாக மாற்றியது. இன்னும் 15 ஆயிரத்து 928 பைகளில் ரூ.4.95 கோடி நாணயங்கள் உள்ளன. அவை இந்த மாத இறுதிக்குள் ரூபாய் நோட்டுகளாக மாற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments (0)
Add Comment