பஞ்சாப்பில் சுற்றித்திரிந்த 2 பாகிஸ்தானியர்கள் கைது..!!!

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் விதமாக பாகிஸ்தானை சேர்ந்த 5 பயங்கரவாதிகள் இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் எல்லை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் பகுதியில் உள்ள எல்லை பகுதியில் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருந்தனர்.

அப்போது பாகிஸ்தானில் இருந்து வந்த 3 ஆளில்லா கண்காணிப்பு டுரோன்கள் (சிறியரக உளவு விமானங்கள்) இந்திய எல்லைக்குள் நேற்று அத்துமீறி பறந்தன.

இதை பார்த்த எல்லை பாதுகாப்பு படையினர் இந்திய எல்லைக்குள் யாரேனும் அத்துமீறி நுழைந்துள்ளனரா? என்பதை கண்டுபிடிக்க அப்பகுதி முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

ஆளில்லா உளவு விமானம் (கோப்பு படம்)

பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் எல்லைப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த இரண்டு நபர்களை சுற்றிவளைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையின்போது பிடிப்பட்டவர்களின் பெயர் முஹம்மது லதீப் மற்றும் சைப் என்பதும் அவர்கள் பாகிஸ்தானில் உள்ள ஒக்காரா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதையும் பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானியர்கள் இருவரையும் கைது செய்த பாதுகாப்பு படையினர் அவர்களிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments (0)
Add Comment