ஜப்பானின் புதிய மன்னராக முடிசூட்டிக் கொண்டார் நருஹிட்டோ..!!

ஜப்பான் நாட்டின் 125-வது மன்னராக இருந்த அகிஹிட்டோ (வயது 85) வயோதிகம், உடல் நலக்குறைவு ஆகியவற்றின் காரணமாக பதவி விலக விருப்பம் தெரிவித்தார். ஜப்பானில் கடந்த 200 ஆண்டுகளில் எந்த மன்னரும் பதவி விலகியதாக சரித்திரம் இல்லை.

பதவி விலகுவதற்கான விதிகளும் சட்டத்தில் இல்லை என்பதால், மன்னர் பதவி விலகுவதற்கான மசோதா கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மன்னர் அகிஹிட்டோ 30-4-2019 அன்று முடிதுறந்தார்.

126-வது மன்னராக பட்டத்துக்கு வந்த இளவரசர் நருஹிட்டோ 1-5-2019 அன்று மன்னரின் பொறுப்புகளை ஏற்றார்.

முறைப்படி ஜப்பானின் மன்னராக முடிசூட்டப்பட்டு அவர் பதவியேற்றாலும் சம்பிரதாயப்படி இம்ப்ரியல் அரண்மனையில் உள்ள அரியாசனம் எனப்படும் மன்னரின் நாற்காலியில் அமரும் வைபவம் இன்று எளிய முறையில் நடைபெற்றது.

சமீபத்தில் ஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயலால் பலர் உயிரிழந்த நிலையில் இன்றைய விழாவை எளியமுறையில் நடத்த மன்னர் நருஹிட்டோ விரும்பினார்.

மன்னராக பதவி பிரமாணம்

மேளங்கள் முழங்க அவர் அரியாசனத்தில் ஏறி பதவி பிரமாண உறுதிமொழி ஏற்ற நிகழ்ச்சியை காண அரச குடும்பத்தினர், உறவினர்கள் பிரிட்டன் இளவரசர் சார்லஸ், தென்கொரியா பிரதமர் லீ நாக்-யோன், 190 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு பிரமுகர்கள் என சுமார் 2 ஆயிரம் பேர் அரண்மனையில் திரண்டிருந்தனர்.

‘இந்த நாட்டின் அதிபராக நான் இன்று முடிசூட்டிக் கொண்டதை நமது மக்களுக்கும் உலகத்துக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜப்பான் மக்களுக்கு பக்கபலமாக நின்று இந்நாட்டின் சின்னமாகவும் மக்களின் ஒருமைப்பாட்டுக்கான அடையாளமாகவும் எனது கடமையை நான் நிறைவேற்றுவேன். ஜப்பான் மக்களின் மகிழ்ச்சிக்காகவும் உலக அமைதிக்காகவும் நான் எப்போதும் பிரார்த்திப்பேன் என உறுதியேற்கிறேன்’ என பிரமாணப் பத்திரத்தை அவர் வாசித்தார்.

மன்னர் உறுதிமொழி ஏற்றவுடன் அங்கிருந்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, ’ஜப்பான் மக்களின் ஒருமைப்பாடு மற்றும் இந்த நாட்டின் அடையாளமாகவும் திகழும் பெருமதிப்புக்குரிய உங்களுக்கு நாங்கள் மரியாதை செலுத்துவோம்’ என கூறியதுடன் ’மன்னர் பல்லாண்டு வாழ்க!’ என்னும் பொருள்பட ஜப்பானிய மொழியில் ‘பன்ஸாயி’ என்று மூன்று முறைவாழ்த்து கூறினார். மற்ற விருந்தினர்களும் அதை எதிரொலித்தனர்.

ராணியுடன் மன்னர்

அரண்மனையில் வெளியே அமைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான தொலைக்காட்சிகள் மூலம் பலத்த மழைக்கு இடையில் குடை பிடித்தவாறு அந்த காட்சியை கண்டு பரவசமடைந்த பொதுமக்களும் மன்னரை வாழ்த்தி முழக்கமிட்டனர்.

வரலாற்று சிறப்புமிக்க இன்றைய விழாவையொட்டி சிறிய குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சுமார் 50 லட்சம் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள்.

ஹகிபிஸ் புயலால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அரியணை ஏறிய மன்னர் மரபுகளின்படி ஊர்வலமாக அழைத்து செல்லப்படும் சம்பிரதாய நிகழ்ச்சி மட்டும் நவம்பர் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மன்னருடன் ராணியாக இன்று அரியணை ஏறிய மசாக்கோ-வுக்கு ஐக்கோ(17) என்னும் ஒரே மகள் உள்ளார். அந்நாட்டின் மரபுகளின்படி அரச குடும்பத்தின் பெண் வாரிசுகள் யாரும் பதவிக்கு வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment