தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவேன் – கோட்டாபாய!!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் நம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்குவேன் என தமிழ் மொழியில் உறுதி தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ஷ பெருந்தோட்ட மக்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் வீடமைப்பு உள்ளிட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்திகளையும் எனது அரசாங்கத்தில் முக்கியத்துவம் கொடுத்து முன்னெடுப்பேன் என தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் 12.11.2019 அன்று கொட்டகலை விளையாட்டு மைதானத்தில் எற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் அங்கு தனது உரையில் தெரிவித்த அவர்,

இந்த நாட்டில் அதி குறைந்த வருமானத்தை பெற்று வாழ்வாதார சுமையுடன் வாழும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளையும் அபிவிருத்தி பணிகளையும் நான் முன்னெடுப்பேன்.

தோட்ட தொழிலாளர்களின் தேவைப்பாடுகள் குறித்து ஆறுமுகன் தொண்டமான் தன்னிடம் எடுத்துரைத்துள்ளதாகவும், அதில் காணப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய பொதுஜன பெரமுனவிற்கு அவருடைய ஆதரவு கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்தவகையில், தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் உயரும் வகையில் அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக ஆயிரம் ரூபாய் சம்பளத்தை நான் தருவேன் என தெரிவித்தார்.

அதேநேரத்தில் நாட்டில் குறைந்த வருமானத்தை பெறுவோர் சமூர்த்தி உதவி தொகைகள் கிடைக்கப்பெற்றோர் மற்றும் கிடைக்கப்படாதோர் போன்றவர்களுக்கும் நோய்களை அனுபவித்து வரும் வரியவர்களுக்கும் மாதம் மாதம் பருப்பு, நெத்திலி உள்ளிட்ட அனைத்து உணவு பொருட்களையும் பொதிகளாகவும் இலவசமாகவும் வழங்குவேன்.

பல்கலைகழக கல்வியை மேற்கொள்ள ஆசைப்படும் மலையக கல்வி சமூகத்தினருக்கு கல்வியை விருத்திப்பதுடன் பாடசாலைகளை அபிவிருத்தி செய்து உயர் கல்வி கற்கும் வசதிகளை எனது அரசாங்கத்தில் செய்து கொடுப்பேன்.

அந்தவகையில் யாழ்ப்பாணத்திற்கு சென்று பல்கலைகழக கல்வியை தொடரும் மாணவர்கள் எதிர்நோக்கும் பொருளாதார சிக்கலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மலையகத்தில் பல்கலைகழகங்களை உருவாக்குவேன்.

நான் என்றும் உங்களுடன் என தெரிவித்த அவர், ஆறுமுகன் தொண்டமானை விசுவாசிக்கும் மக்கள் என்மீது நம்பிக்கை வைத்து என்னை வெற்றிப்பெற செய்யுங்கள் நான் செய்வதை சொல்லுகின்றேன். சொன்னதை செய்வேன்.

தேயிலைத்துறை அபிவிருத்தி அடையும் பட்சத்தில் தொழிலாளர்களை வறுமையில் இருந்து மீட்க முடியும். அதேநேரத்தில் இலங்கையில் தேயிலைக்கு வெளிநாடுகளில் சிறப்பான விலையும் அதற்கான கேள்வியையும் உயர்த்தி தேயிலைக்கு உயர்வான விலையை பெற்றுக்கொடுப்பேன்.

தேயிலை தொழிலை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்க வேலைத்திட்டம் ஒன்றை கொண்டு வருவேன் எனவும் நீண்ட காலமாக பழைய முறையிலான குடியிருப்புகளில் வாழ்ந்து வரும் பெருந்தோட்ட மக்களுக்கு என்னுடைய 5 வருட ஆட்சியில் புதிய வீடுகளை அமைத்து கொடுப்பேன்.

அத்துடன் மலையக பிரதேசங்களை உல்லாச பயண பிரதேசங்களாக அபிவிருத்தி செய்வதுடன் வெளிநாடு உல்லாச பயணிகளை பெரும்மளவு வரவழைக்கும் பட்சத்தில் அதனூடாக மலையக பிரதேச பிள்ளைகளின் வருமானத்தையும் உயர்த்துவதுடன் தாம் கற்ற கல்வியின் அடிப்படையில் அரசாங்க உத்தியோகங்களையும் வழங்குவதற்கு நான் உறுதி கூறுகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

Comments (0)
Add Comment