நவாஸ் ஷெரீப் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல லாகூர் ஐகோர்ட் அனுமதி..!!!

‘பனாமா பேப்பர்ஸ்’ ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று, லாகூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவ சிகிச்சைக்காக ஜாமீன் வழங்கப்பட்டது.

பாகிஸ்தானில் உள்ள அனைத்து மருத்துவ வசதிகளையும் பயன்படுத்தி நவாஸ் ஷெரீப்புக்கு சிகிச்சை அளித்து பார்த்துவிட்டதாகவும், வெளிநாட்டில் சிகிச்சை பெற்றால் மட்டுமே அவரது உடல்நிலை தேறும் என்றும் மருத்துவர்கள் கூறினர்.

இது தொடர்பாக நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் விடுத்த கோரிக்கையை ஏற்று அவர் சிகிச்சைக்காக லண்டன் செல்ல பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியது. அதன்படி கடந்த 10-ந் தேதி நவாஸ் ஷெரீப் தனது சகோதரர் ‌ஷாபாஸ் ஷெரீப்புடன் லண்டனுக்கு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

ஆனால் வெளிநாடு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இருந்து நவாஸ் ஷெரீப்பின் பெயர் நீக்கப்படாததால் அவர் சிகிச்சைக்காக லண்டன் செல்வதில் சிக்கல் எழுந்தது.

தடை பட்டியலில் இருந்து நவாஸ் ஷெரீப்பின் பெயரை நீக்காதது இம்ரான்கான் அரசின் திட்டமிட்ட சதி என நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி குற்றம் சாட்டியது. ஆனால் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த இம்ரான்கான் அரசு இந்த பிரச்சினைக்கு சட்டரீதியில் தீர்வு காண்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் ஆராய்ந்து வருவதாக கூறியது.

இந்த நிலையில் லண்டன் செல்வதற்கு அனுமதி வழங்குவது குறித்து விவாதிப்பதற்காக பிரதமர் இம்ரான்கான் தலைமையில் மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நவாஸ் ஷெரீப் லண்டன் செல்வதற்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி சிகிச்சைக்கு பின் நாடு திரும்புவேன் என்றும், ஊழல் வழக்குகளை எதிர்கொள்வேன் என்றும் உறுதியளித்து, ரூ.700 கோடிக்கான உறுதிமொழி பத்திரத்தில் நவாஸ் ஷெரீப் கையெழுத்திட்டால் அவர் லண்டன் செல்லலாம் என அரசு அறிவித்தது.

ஆனால், அரசின் இந்த நிபந்தனையை ஏற்க நவாஸ் ஷெரீப் மறுத்துவிட்டார். மேலும் இது சட்டவிரோதமானது என்றும், இம்ரான்கான் அரசு தனது உடல்நலத்தில் அரசியல் செய்வதாகவும் அவர் கூறி இருந்தார்.

இதற்கிடையில், வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இருந்து தனது பெயரை நீக்க வேண்டுமென்ற கோரிக்கையுடன் லாகூர் ஐகோர்ட்டில் நவாஸ் ஷெரீப் கடந்த வியாழக்கிழமை புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவின் மீது இன்று விசாரணை நடத்திய நீதிபதி அலி பக்கர் நஜாபி, நீதிபதி அஹமத் நயீம் ஆகியோர் எவ்வித நிபந்தனையும் விதிக்காமல் வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இருந்து நவாஸ் ஷெரீப் பெயரை 4 வாரங்களுக்கு நீக்கி வைக்குமாறு அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

இதைதொடர்ந்து அவர் விரைவில் சிகிச்சைக்காக லண்டன் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments (0)
Add Comment