16 வயது இளைஞரை களம் இறக்க தயாராகும் பாகிஸ்தான் அணி!

கிரிக்கெட்டில் ஏராளமான புது வீரர்களை அறிமுகப்படுத்திய பெருமை பாகிஸ்தான் அணிக்கு உண்டு. இளம் வயதில் சர்வதேச அணியில் அறிமுகம் ஆன பெரும்பாலான வீரர்கள் ஜொலிக்காமல் சென்றுள்ளனர். சிலர் ஜொலித்துள்ளனர்.

ஷாகித் அப்ரிடி 17 வயதில் களம் இறங்கி அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார். 1996 ஆம் ஆண்டு ஹசன் ராசா தனது 14 வயதில் பாகிஸ்தான் அணியில் அறிமுகம் ஆகி, மிக இளம் வயதில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய வீரர் என்ற சாதனையை பெற்றார். பின்நாளில் அவரது வயது குறித்த சர்ச்சை விவாதமாக மாறியது.

இந்திய அணியின் சச்சின் தெண்டுல்கர்தான் 16 வயதில் டெஸ்ட் போட்டியில் விளையாடிய இளம் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்நிலையில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்டில் பாகிஸ்தான் அணி 16 வயதான நீசம் ஷாவை களம் இறக்க இருக்கிறது.

அவுஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் 8 ஓவர்களை மிகவும் அபாரமாக வீசினார். அவரது பந்து வீச்சில் அனல் பறந்தது. நசீம் ஷா பந்து வீச்சு அனைவரையும் ஈர்த்தது. இதனால் பிரிஸ்பேன் டெஸ்டில் அவரை பாகிஸ்தான் அணி களம் இறக்க திட்டமிட்டுள்ளது.

´´நசீம் ஷா அவரது பந்து வீச்சை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இதுதான் எங்களுக்கான சிறந்த யோசனை. அவர் சிறந்த பந்து வீச்சு ஆக்சனை பெற்றுள்ளார். பந்து வீச்சை அவரால் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். அவருடைய பந்து வீச்சு திறன் அவருக்குத் தெரியும். முதல்தர போட்டிகளில் மிகவும் சிறப்பாக பந்து வீசியுள்ளார். அவுஸ்திரேலிய மண்ணில் கூட சிறப்பாக பந்து வீசினார். எங்களின் முக்கிய பந்து வீச்சாளராக இருப்பார். அவர் பந்து வீசுவதை பார்க்கும்போது, எங்களது மேட்ச் வின்னராக இருக்க முடியும்´´ என பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.

´´நசீம் ஷாவுக்கு என்னுடைய வயதில் பாதி வயதுதான் ஆகிறது. அவருக்கு 16 வயதுதான். அவரும் நானும் மோதுவது சுவாரஸ்யமாக இருக்கும். டெஸ்ட் போட்டியில் 16 வயதில் விளையாடும்போது படபடப்பாக இருக்கும். குறிப்பாக வெளிநாட்டு மண்ணில் விளையாடும் போது கூடுதலாக இருக்கும். அவரை பாகிஸ்தான் அணி தேர்வு செய்தால், அவர் உண்மையிலேயே சில சிறப்பு வாய்ந்த திறமையை பெற்றிருப்பார். எதையும் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.

எங்களை பொறுத்த வரைக்கும் அவரை ஏராளமான ஓவர்கள் வீச வைத்து, சோர்ந்து போக முயற்சிப்போம். அவரால் ஏராளமான ஓவர்கள் வீச முடியாது. இதுதான் எங்களது திட்டமாக இருக்கும்´´ என்று அவுஸ்திரேலியாவின் முன்னணி துடுப்பாட்ட வீரர் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment