சாப்பிடும் முறையும் முக்கியம்…!! (மருத்துவம்)

‘கல்வி, பொருளாதாரம் போன்ற நம் வாழ்வின் ஒவ்வொரு அத்தியாவசிய தேவைகளுக்காகவும் தற்போது நாம் அனைவரும் வேகமாக பயணிக்கும் ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற அவசரகதியான வாழ்வியல் சூழல்களால் சாப்பிடும்போதுகூட நாம் சரியான சாப்பிடும் முறைகளைக் கடைபிடிப்பதில்லை. இதனால் நமக்கு பல்வேறு உடல்நல பிரச்னைகள் உண்டாகிறது’ என்ற குடல் மற்றும் இரைப்பை அறுவைசிகிச்சை மருத்துவர் தீபக் சுப்பிரமணியனிடம் இதுகுறித்து மேலும் விளக்கமாகக் கேட்டோம்…

இன்றைய பரபரப்பான நகர்ப்புற வாழ்க்கைச் சூழலில் சாப்பிடுவதற்குகூட சரியாக நேரம் ஒதுக்காமல் வேகவேகமாக ஓடுகிறபொழுது, பலர் காலை உணவு சாப்பிடுவதே இல்லை. அப்படியே சாப்பிட்டாலும் வேகவேகமாக அள்ளி விழுங்கி விட்டு செல்கின்றனர். சிலர் பணியிடங்களில் உள்ள பணிச்சுமை காரணமாக பல நேரங்களில் சாப்பிடுவதையே தவிர்த்துவிடுகின்றனர். அது மட்டுமல்ல இன்று பலர், பசி எடுக்கும் பொழுது சரியான நேரத்திலோ, சரியான முறையிலோ சாப்பிடுவதும் இல்லை.

இதனால் நெஞ்செரிச்சல், வாயு பிரச்னைகள் மற்றும் சிறுகுடல், பெருங்குடல், இரைப்பை புண்கள் போன்றவையே பொதுவாக ஏற்படுகிற பிரச்னைகளாக
இருக்கிறது. பள்ளி, கல்லூரி, அலுவலகம் மற்றும் பணியிடங்களில் ஒரு மணி நேரம் வரையில் உணவு இடைவேளை விடுவதற்கும் காரணம் உள்ளது. உண்ணும் உணவை அவசரமின்றி, பொறுமையாக நன்கு மென்று, ருசித்து சாப்பிட வேண்டும் என்கிற காரணத்திற்காகவே இதுபோன்ற கால அளவில் உணவு இடைவேளைகளை வரையறை செய்துள்ளனர்.

ஒரு நாளைக்கு காலை, மதியம், இரவு என்று மூன்று பொழுதுகள் சாப்பிடுபவர்கள், ஒரு பொழுது சாப்பிடுவதற்கு குறைந்தது 10 முதல் 15 நிமிடங்களாவது செலவிட வேண்டும். தமிழ்நாட்டு உணவுமுறையில் சாம்பார், ரசம், மோர் என்று வரிசையாக சாப்பிடும் பழக்கம் உள்ளது. முதலில் காரமான உணவுப் பொருளை சாப்பிடத் தொடங்கி கடைசியாக தயிர் அல்லது மோர் என்று சாப்பிடுவது உணவு செரிமானத்துக்கு உதவியாக இருக்கும். அதாவது நாம் ஒரு சில நேரங்களில் அதிக காரமான உணவினை மட்டுமே சாப்பிடுகிறபோது வயிற்றில் ஏதோ ஒரு அமிலம் இருப்பது போன்ற அல்லது நெஞ்செரிச்சல் உணர்வு ஏற்படுவதுண்டு.
இதுபோன்ற உடல் உபாதைகள் ஏற்படாமல் இருப்பதற்கு நம் முன்னோர்கள் உருவாக்கியுள்ள உணவுமுறை உதவியாக இருக்கிறது.

இதுபோன்ற ஒரு வரிசைப்படி சாப்பிடும் முறையை நம் நாட்டில்தான் பின்பற்றுகிறோம். அமெரிக்கா, ஐரோப்பா போன்ற பிற நாடுகளில் இதுபோன்ற உணவு வரிசை முறைகள் பின்பற்றப்படுவது இல்லை. பலரும் நினைப்பது போல நாம் சாப்பிடும் உணவின் செரிமானம், அது நம் வயிற்றுக்குள் சென்ற பிறகு மட்டுமே நடப்பதல்ல. அது நமது வாயில் இருந்தே தொடங்கி விடுகிறது. உணவானது வாயில் நமது எச்சிலில் உள்ள என்சைம்களுடன் சேர்ந்து நன்கு அரைக்கப்படுகிற பொழுதில் இருந்தே அதன் செரிமானம் ஆரம்பமாகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இதை அறியாமல் அப்படியே கடித்து விழுங்குகிற அனைத்து உணவுப் பொருட்களின் செரிமானப் பணியும் வயிற்றில் உள்ள குடலுக்கு மொத்தமாக அளிக்கப்படுகிற பொழுது அது அதிகப் பளுவாகி குடலுக்கு சிரமத்தை ஏற்படுத்தி விடுகிறது. இந்தக் காரணத்தால் தற்போது வயிற்றுப்போக்கு பிரச்னை அதிகமாகி வருகிறது. இரவு தூக்கத்திற்குப் பிறகு அதிக நேரம் எதுவும் சாப்பிடாமல் இருந்துவிட்டு காலை உணவு சாப்பிடுவதால் அது உடலுக்கு மிகவும் அவசியமானது. அன்றைய தினம் நமது உடல் இயக்கங்களுக்குத் தேவையான சக்தியை அளிப்பதாக காலை உணவு இருக்க வேண்டியது அவசியம்.

இதனால்தான் காலை உணவை ஒரு ராஜாவைப் போல உண்ண வேண்டும் என்று சொல்கிறார்கள். அதன் பிறகு மதிய உணவு காலை உணவைவிட குறைவாக இருக்க வேண்டும். அதாவது ஒரு சாதாரண குடிமகன் உண்பதைப்போல உண்ண வேண்டும். இரவு உணவு மதிய உணவைவிட குறைவாக இருக்க வேண்டும். அதாவது யாசகம் பெற்று சாப்பிடுபவரைப் போல சாப்பிட வேண்டும் என்றெல்லாம் சொல்வதை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இன்று நம்மில் பலர் பல்வேறு காரணங்களால் நேரம் இல்லை என்று சொல்லி, உடலுக்கு மிகவும் அவசியமான காலை உணவை தவிர்க்கும் பழக்கத்தால் பல்வேறு உடல்நல பிரச்னைகளுக்கு ஆளாகி வருகிறோம்.

மேற்சொன்ன அளவுகளில் உணவு உண்பதோடு, காலை உணவை நாம் அனைவரும் கட்டாயம் சாப்பிட வேண்டும். பணிக்கு செல்கிற நேரத்தில் சமைக்கிற இடத்தில் நின்று கொண்டே அவசர அவசரமாக சாப்பிடக்கூடிய நபர்களை நாம் பார்த்திருப்போம். அது மட்டுமின்றி சாலையோரக் கடைகளில் பலர் நின்றுகொண்டே வேகவேகமாக சாப்பிடுவதையும் பார்த்திருப்போம். இப்படி நின்று கொண்டே அவசரகதியில் உணவு உண்பது தவறான ஒன்று.
ஓரிடத்தில் நாற்காலியில் அமர்ந்து சாப்பிடலாம். அல்லது தரையில் சம்மணம் போட்டு அமர்ந்தும் சாப்பிடலாம்.

இப்படி தரையில் சம்மணம் போட்டு உட்கார்ந்து நிதானமாக சாப்பிடுவது உடல்நலனுக்கு மிகவும் நல்லது. இப்படி சாப்பிட முடியாதவர்கள் இருக்கைகளில் அமர்ந்து சாப்பிடலாம். ஆனால் நின்றுகொண்டே அவசரகதியில் சாப்பிடுவது கூடாது. சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னரோ, சாப்பிட்ட பிறகு 30 நிமிடங்கள் வரையிலோ அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டாம். அது நாம் உண்ணும் உணவு சரியாக செரிமானம் அடையாமல் இருக்க காரணமாகிறது. அதே போல சாப்பிடுகிற பொழுதும் தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டாம்.

ஒரு நாளைக்கு உடல் தேவைக்கு ஏற்ப 4 முதல் 5 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். ஆனால், அதை எப்போது எவ்வளவு குடிக்க வேண்டும் என்பதை அறிந்து சரியாக குடித்தால் உணவு செரிமானத்துக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சிலர் மதிய வேளைகளில் சாப்பிட்ட உடனே ஒரு குட்டித் தூக்கம் போட்டுட்டு வந்துடுறேன் என்பார்கள். இது தவறான பழக்கம். சாப்பிட்ட பிறகு நாம் நின்று கொண்டோ, நடந்து கொண்டோ அல்லது அமர்ந்து கொண்டோ ஏதாவது ஒரு வேலை செய்கிறபொழுது வயிற்றில் நடைபெறும் செரிமானம் சரியாக நடைபெறும். ஆனால் படுக்கையில் படுத்த உடனே செரிமானத் திறன் குறைந்துவிடும்.

நாம் சாப்பிடும் உணவு நமது வயிற்றில் குறைந்தது 2 மணி நேரம் முதல் அதிகபட்சம் 6 மணி நேரம் வரை தங்கியிருக்கும். இந்த நேரத்தில் அந்த உணவு செரிமானம் அடைந்து, அதிலிருந்து தேவையான சத்துக்களும், ஆற்றலும் உடலுக்குக் கிடைக்கிறது. இதனால்தான் நாம் தினசரி 4 முதல் 6 மணி நேர கால
இடைவெளிகளில், 3 வேளைகள் சாப்பிடுகிறோம். சாப்பிட்ட உடனே தூங்குவதால் அந்த உணவு வயிற்றில் வழக்கமாக தங்கியிருக்கும் நேரத்தைவிட கூடுதலான நேரம் தங்கியிருக்கும். இப்படி அதிக நேரம் தங்கியிருப்பதால் அதை செரிக்கச் செய்வதற்கான அமிலங்கள் அதிக அளவில் சுரக்க ஆரம்பிக்கும்.

இப்படி படுத்திருக்கும் பொழுது சுரக்கும் அதிக அளவிலான அமிலங்கள், வயிற்றோடு நிற்காமல் மேலே உணவுப் பாதைக்கும் போகிறது. இதனால் செரிமானக் கோளாறு, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகள் உண்டாகிறது. சாப்பிட்ட உடனே படுப்பவர்களுக்கு இந்தப் பிரச்னைகள் அதிகளவில் உண்டாகிறது. நாளடைவில் இந்தப் பிரச்னைகள் தீவிரமாகிற பொழுது அதுவே குடல் மற்றும் இரைப்பை சார்ந்த புற்றுநோய்கள் உண்டாக காரணமாகிறது. எனவே சாப்பிட்ட உடனே தூங்கச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். இரவு உணவருந்திய பிறகு இரண்டு மணி நேரம் கழித்து தூங்கச் செல்வதே இது போன்ற பிரச்னைகளைத் தவிர்க்க உதவியாக இருக்கும்.

வயிறு என்பது தனியாக செயல்படக்கூடிய உறுப்பு அல்ல. அது மூளையோடு நரம்புகள் மூலமாக இணைக்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு மனநல பாதிப்புகள் இருந்தால் சரியாக தூக்கம் வராது. சரியான தூக்கம் இல்லை என்றால் அந்த நபரின் அடுத்த நாள் உடல் செயல்பாடுகள் சரியாக இருக்காது. உடல் செயல்பாடுகள் சரியாக இல்லை என்றால் செரிமான பிரச்னைகள் உண்டாகும். செரிமான பிரச்னைகள் இருந்தால் சரியாக பசி எடுக்காது. எனவே, உணவு உண்பதிலும், அந்த உணவு மூலம் உடலுக்குத் தேவையான சத்துக்கள் மற்றும் ஆற்றல் கிடைப்பதிலும் பிரச்னைகள் உண்டாகிறது.

அதிக மன அழுத்தம் மற்றும் மனநலம் சார்ந்த பிரச்னைகள் இருப்பவர்களுக்கு முதலில் பாதிக்கப்படுவது செரிமான உறுப்புகளே. அதேபோல மனநல பிரச்னைகள் சரியாகிற பொழுது முதலில் சரியாவதும் அந்த செரிமான உறுப்புகளே. வயிறு முழுவதும் நிரம்புமாறு சாப்பிடுவது சரியல்ல. எப்போதும் முக்கால் வயிறு நிரம்புமாறு சாப்பிடுவதே சரியானது. காலையில் எதுவுமே சாப்பிடாமல் இருந்துவிட்டு, மதிய வேளையில் சேர்த்து அதிகமாக உணவு எடுத்துக் கொள்வதும் சரியல்ல. பசியெடுக்கும் பொழுது சரியான நேரத்தில், சரியான அளவில் சாப்பிட வேண்டும்.

கடினமான உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு கார்போஹைட்ரேட்கள் அதிகமாக தேவைப்படும். அலுவலகப்பணி மற்றும் உட்கார்ந்த நிலையில் பணி செய்கிறவர்களுக்கு Balanced diet(சீரான உணவு) தேவைப்படும். விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும் நபர்கள் பயிற்சி செய்கிற பொழுது அதிக அளவு புரத உணவுகளும், போட்டிகளில் ஈடுபடுகிற பொழுது கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளையும் அதிகமாக எடுத்துக் கொள்வதுண்டு. இதுபோல குழந்தைகள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள் என்று ஒவ்வொருவருக்கும் தேவையான சத்துக்கள் மற்றும் உணவு தேவைகளில் வேறுபாடுகள் உள்ளது. எனவே, அவரவர் தேவையறிந்து சரியான முறையில், சரியான அளவில் உணவு உண்பதே உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது.

Comments (0)
Add Comment