உன்னாவ் இளம்பெண் மரணத்துக்கு நீதி கேட்டு டெல்லியில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி..!!

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சிவம் திரிவேதி, சுபம் திரிவேதி என்ற 2 பேர் கடத்திச் சென்று இந்த பாதக செயலில் ஈடுபட்டனர்.

இருப்பினும், கடந்த மார்ச் மாதம்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கு விசாரணைக்காக, நேற்று காலை அந்த இளம்பெண் தனது வீட்டில் இருந்து ரேபரேலி கோர்ட்டுக்கு புறப்பட்டார்.

கோர்ட்டுக்கு செல்லும் வழியில், குற்றம்சாட்டப்பட்ட சிவம் திரிபாதி, சுபம் திரிபாதி உள்பட 5 பேர் சேர்ந்து, அப்பெண்ணை தீ வைத்து எரித்தனர். 90 சதவீத தீக்காயங்களுடன் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அந்தப் பெண், நேற்று இரவு உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், உயிரிழந்த உன்னாவ் இளம் பெண்ணின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூற ஆளும் பாஜக கட்சியை சேர்ந்த கமல் ராணி வருன் , சுவாமி பிரசாத் மௌரியா ஆகிய மந்திரிகளும் சாக்‌ஷி மகாராஜ் என்ற எம்.பி.யும் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்றனர்.

மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி மற்றும் போராட்டம்

ஆனால் அவர்களை உயிரிழந்த பெண்ணின் உறவினர்களும், சில மாணவர் அமைப்பினரும் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர், போலீசார் போராட்டக்காரர்களை விரட்டியடித்ததையடுத்து உன்னாவ் பெண்ணின் குடும்பத்தினரை மந்திரிகள் சந்தித்து ஆறுதல் கூறினர்.

முன்னதாக, காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தியும் உன்னாவ் பெண்ணின் வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இந்நிலையில், தீ வைத்து எரித்து கொல்லப்பட்ட உன்னாவ் பெண்ணுக்கு நீதி கேட்டு லக்னோவில் போராட்டம் நடைபெற்றது. இதைதொடர்ந்து இன்று மாலை தலைநகர் டெல்லியில் பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன போராட்டம் நடத்தினர்.

டெல்லியில் போராட்டம் நடத்தும் போராட்டக்காரர்கள்

போராட்டக்காரர்கள் அனைவரும் ராஜ்கோட் பகுதியில் இருந்து இந்தியா கேட் நோக்கி பேரணியாக சென்றனர்.

அவர்களை தடுத்து நிறுத்த போலீசார் வைத்திருந்த தடுப்புகளை மீறி அவர்கள் சென்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் போராட்டக்காரர்களை தண்ணீரை பீய்ச்சியடித்து போலீசார் விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழல்நிலவி வருகிறது.

Comments (0)
Add Comment