10 தூக்கு கயிறுகளை தயாரிக்க பீகார் ஜெயிலுக்கு உத்தரவு – சிலரின் மரண தண்டனையை நிறைவேற்ற திட்டம்..!!

உலகில் பல நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனாலும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இன்னும் மரண தண்டனை நீடித்து வருகிறது.

ஒவ்வொரு நாட்டிலும் மரண தண்டனையை ஒவ்வொரு முறையில் நிறைவேற்றுகிறார்கள்.

சில நாடுகளில் துப்பாக்கியால் சுட்டு கொல்கிறார்கள். வேறு சில நாடுகளில் வி‌ஷ ஊசி போட்டு கொல்கிறார்கள். இன்னும் சில நாடுகளில் வாளால் வெட்டி தண்டனை நிறைவேற்றும் முறையும் இருக்கிறது.

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தூக்கு கயிறு மூலம் தொங்க விட்டு கொல்லும் பழக்கம் உள்ளது.

இந்தியாவில் ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆரம்ப காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் பல கொடிய குற்றவாளிகள் தூக்கில் போடப்பட்டு வந்தனர்.

சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக இப்போதெல்லாம் மிக, மிக அரிதாகவே இந்தியாவில் தூக்கு தண்டனை நிறை வேற்றப்படுகிறது.

கடைசியாக 2013-ம் ஆண்டு பாராளுமன்ற தாக்குதல் பயங்கரவாதி அப்சல்குரு தூக்கில் போடப்பட்டார். அதற்கு முன்னதாக மும்பை தாக்குதல் பயங்கரவாதி அஜுமல் கசாப்புக்கு தூக்கு தண்டனை நிறை வேற்றப்பட்டது.

கடந்த 6 ஆண்டுகளாக யாருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

இந்த நிலையில் டெல்லி மாணவி நிர்பயா கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற வினைய் சர்மா தூக்கில் போடப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவனுடைய கருணை மனு கடந்த சனிக்கிழமை நிராகரிக்கப்பட்டு இருக்கிறது.

எனவே, தண்டனை நிறை வேற்றப்பட வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது.

பெண்களை கற்பழித்து கொல்லும் கொடிய குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும் என்று நாடு முழுவதும் ஓங்கி குரல் ஒலிக்கிறது.

ஐதராபாத்தில் பெண் டாக்டர் பிரியங்காவை கற்பழித்து கொன்ற 4 பேரையும் போலீசார் என் கவுண்டர் செய்து கொன்றதை நாடே கொண்டாடுகிறது.

எனவே, கற்பழிப்பு கொலையில் ஈடுபட்டு மரண தண்டனை பெற்ற கைதிகளுக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில் பீகார் மாநிலம் பக்சர் என்ற இடத்தில் உள்ள ஜெயில் நிர்வாகத்துக்கு 10 தூக்கு கயிறுகளை தயாரித்து தரும்படி மற்ற ஜெயில்களில் இருந்து ஆர்டர் வந்துள்ளது.

இந்தியாவில் பெரும்பாலான ஜெயில்களில் கைதிகளை தூக்கில் போடுவதற்கான வசதி உள்ளது. ஆனாலும், அந்த ஜெயில்களில் தூக்குகயிறு தயாரிப்பது கிடையாது. ஒரு சில ஜெயில்களில் மட்டுமே இந்த வசதி உள்ளது. அந்த வகையில் பக்சர் ஜெயிலிலும் தூக்கு கயிறு தயாரிக்கப்படுகிறது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1930-ம் ஆண்டு முதல் இந்த ஜெயிலில் தூக்கு கயிறு தயாரித்து வருகிறார்கள்.

இதற்காக தனிப்பிரிவே அந்த ஜெயிலில் செயல்பட்டு வருகிறது. குறிப்பிட்ட ஜெயில் கைதிகளை தேர்வு செய்து அவர்களுக்கு தூக்கு கயிறு தயாரிப்பது எப்படி? என்று பயிற்சி அளித்து வைத்திருப்பது வழக்கம்.

இதற்கான பயிற்சியை ஜெயில் அதிகாரிகள் வழங்குவார்கள். அவர்கள் முன்னிலையில் தூக்கு கயிறு தயாரிக்கப்படும்.

இதற்காக விசே‌ஷ விசைத்தறி எந்திரம் ஒன்றும் அந்த ஜெயிலில் உள்ளது. ஜெ-30 என்ற பருத்தி நூல் கொண்டு இந்த தூக்கு கயிறு தயாரிக்கப்படும்.

ஒரு கயிறு தயாரிப்பதற்கு 7,200 நூற்கண்டுகள் தேவைப்படும். சில ரசாயனங்களையும் கலந்து இந்த கயிறை தயாரிப்பார்கள்.

ஒரு தூக்கு கயிறின் நீளம் குறைந்தபட்சம் 16 அடி வரை இருக்கும். அது ஒவ்வொரு ஜெயிலில் உள்ள வசதிக்கு ஏற்றார் போல் இதன் நீளம் அதிகரிக்கவும் செய்யப்படும். தூக்கு கயிறின் மொத்த எடை 150 கிலோ வரை இருப்பது உண்டு.

விசே‌ஷ தொழில்நுட்ப முறையில் இந்த கயிறு தயாரிக்கப்படும். ஒரு கயிறை தயாரிப்பதற்கு பலர் பணி செய்ய வேண்டும்.

இவ்வாறு ஒரு கயிறு தயாரிக்க 3 நாட்கள் ஆகும். இதன் உற்பத்தி செலவு ரூ.1,700-ல் இருந்து 2 ஆயிரம் வரை இருக்கும். இதை மணிலா கயிறு என்று அழைப்பார்கள்.

இது சம்பந்தமாக பக்சர் ஜெயில் துறை சூப்பிரண்டு விஜய்குமார் அரோரா கூறும்போது, கடைசியாக எங்கள் ஜெயிலில் இருந்து அஜுமல் கசாப்பை தூக்கில் போடுவதற்காக தூக்கு கயிறு தயாரித்து கொடுத்தோம்.

இப்போது 10 கயிறுகளுக்கு ஆர்டர் வந்துள்ளது. இவை அனைத்தையும் தயாரிப்பதற்கு 25 நாட்கள் வரை ஆகும்.

ஏற்கனவே 1992, 1995-ம் ஆண்டுகளில் பகல்பூர் ஜெயிலுக்கு நாங்கள் கயிறு தயரித்து கொடுத்துள்ளோம்.

மேற்கு வங்காளத்தில் 2004-ம் ஆண்டு சிறுமி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட தனஞ்செய சட்டர்ஜிக்கும் நாங்கள் தான் தூக்கு கயிறு தயாரித்து வழங்கினோம் என்று கூறினார்.

Comments (0)
Add Comment