மணிக்கு 240 கிலோமீற்றர் வேகத்தில் சென்ற கார்: பொலிசாரிடம் சிக்கியது எப்படி தெரியுமா..!!

பிரான்சில் மணிக்கு 240 கிலோமீற்றர் வேகத்தில் கார் ஒன்று செல்ல, பொலிசார் அதை பின்தொடர, வகையாக சிக்கிக்கொண்டார் அந்த காரின் சாரதி.

பிரான்சின் Drôme பகுதியில் ஸ்போர்ட்ஸ் கார் ஒன்று மணிக்கு 206 கிலோமீற்றர் வேகத்தில் செல்வதைக் கண்டு அதை துரத்தியிருக்கிறார்கள் பொலிசார்.

பொலிசார் துரத்துவதைக் கண்டதும், காரின் சாரதி மேலும் வேகத்தை அதிகரித்து, மணிக்கு 240 கிலோமீற்றர் வேகத்தில் காரைச் செலுத்தியிருக்கிறார்.

சினிமாவில் வருவது போல் ஒரு பொலிஸ் துரத்தும் காட்சி அரங்கேற, எதிர்பாராத விதமாக சட்டென நின்றுள்ளது அந்த கார்.

அப்புறம்தான் பொலிசாருக்கு தெரிந்திருக்கிறது, அந்த காரில் சுத்தமாக பெட்ரோல் இல்லாமல் அந்த கார் நின்றுபோன விடயம்.

உடனே பொலிசார் இறங்கி காரை சூழ்ந்துகொள்ள, காரின் சாரதி இருக்கையில் யாரையும் காணோம்! காரின் பின் இருக்கையில் மட்டும் இரண்டுபேர் உட்கார்ந்திருந்திருக்கிறார்கள். அவர்களிடம் காரின் சாரதியை எங்கே என்று கேட்டால், அவர் இறங்கி ஓடிவிட்டார் என்று கூறியிருக்கிறார்கள் இருவரும்.

பின்னர் முறைப்படி விசாரிக்க, அவர்களில் 32 வயதுடைய ஒருவர்தான் காரின் சாரதி என்பது தெரியவந்துள்ளது.

அவர் Saint-Etienneஐச் சேர்ந்த மெக்கானிக் ஷாப் ஒன்றின் உரிமையாளர்.அவரை கைது செய்த பொலிசார், அவர் ஏற்கனவே ஒரு முறை வேகக்கட்டுப்பாட்டை மீறியவர் என்பதும் தெரியவர, அவர் மீது தொடர்ந்து வேகக்கட்டுப்பாட்டை மீறுதல், பொலிஸ் அதிகாரிகளின் உத்தரவை மீறுதல், மற்றவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் முதலான பல குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர்.

அத்துடன், அந்த கார் பொது சாலையில் ஓடுவதற்கு தகுதியற்றது என்பது தெரியவர, காரை பறிமுதல் செய்துள்ள பொலிசார், ஆறு மாதங்களுக்கு கார் ஓட்ட அவருக்கு தடை விதித்துள்ளனர்.

2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவர் Valenceஇலுள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Comments (0)
Add Comment