எச்சரிக்கையை மீறி நியூசிலாந்து தீவுக்கு சுற்றுலா சென்ற பயணிகள்: 5 பேர் பலி, 27 பேரை காணவில்லை..!!

நியூசிலாந்துக்கு சொந்தமான தீவு ஒன்றில் எரிமலை இருப்பதால் அங்கு சுற்றுலா செல்வது ஆபத்து என எச்சரித்தும், எச்சரிக்கையை மீறி அங்கு சென்ற ஐந்து பேர் உயிரிழந்துள்ளதோடு, 27 பேரைக் காணவில்லை.

நியூசிலாந்துக்கு சொந்தமானது White Island என்னும் தீவு.

அந்த தீவிலிருக்கும் எரிமலை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்பதால் அங்கு சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு அறிவியலாளர்கள் பல ஆண்டுகளாக சுற்றுலாப்பயணிகளை எச்சரித்து வந்துள்ளனர்.

இருந்தும் அங்கிருக்கும் கைவிடப்பட்ட சல்பர் தொழிற்சாலை உட்பட பல இடங்களைக் காணும் ஆசையில் மக்கள் தொடர்ந்து அங்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், இன்று உள்ளூர் நேரப்படி, 2.11 மணியளவில் திடீரென எரிமலை வெடித்தது.

எரிமலை வெடித்ததில் காயமடைந்த 18 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை மோசமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீவில் பொருத்தப்பட்டுள்ள ஒரு கண்காணிப்பு கமெராவில் நடக்கும் நிகழ்வுகளை ஆன்லைனில் கவனித்தபோது, எரிமலை வெடிப்பதற்கு சற்று முன்பு, அதாவது 2.10க்கு அங்கு சிலர் நிற்பது தெரியவந்தது.

ஆனால், எரிமலை வெடித்ததில் கமெரா செயலிழந்துவிட்டது.

துரதிர்ஷ்டவசமாக 3.45க்கு மீண்டும் ஒருமுறை எரிமலை வெடித்துள்ளது. இதற்கிடையில், மீண்டும் எரிமலை வெடிக்க வாய்ப்புள்ளது என்பதால், காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்காக மீட்புக்குழுவினரை அனுப்புவதும் ஆபத்தான விடயம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Comments (0)
Add Comment