உயர் நீதிமன்றம் உபாலி பத்மசிறிக்கு எச்சரிக்கை!!

பிரதிவாதிக்கு கடிதம் மூலம் நீதிமன்ற நடவடிக்கைகளை கையாள முடியாது என கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் வனவள திணைக்களத்தின் முன்னாள் உதவி பணிப்பாளர் உபாலி பத்மசிறிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அனுமதி பத்திரமின்றி 5 யானைக் குட்டிகளை தம்வசம் வைத்திருந்து விற்பனை செய்த குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள சமரப்புலிகே நிராஜ் ரொசான் அல்லது அலி ரொசான் உள்ளிட்ட எண்மருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள வனவள திணைக்களத்தின் முன்னாள் உதவி பணிப்பாளர் உபாலி பத்மசிறிக்கே மேற்குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு (09) உயர் நீதிமன்ற நீதியர்களான விக்கும் களுஆராச்சி, தம்மிக்க கணேபொல மற்றும் ஆதித்யா பட்டபெந்தி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது பிரதிவாதியான வனவள திணைக்களத்தின் முன்னாள் உதவி பணிப்பாளர் உபாலி பத்மசிறி என்பவர் பிரதிவாதிகள் சார்பில் கடிதம் ஒன்றை நீதிமன்றத்திற்கு எழுதியிருந்தமை தொடர்பில் தெரியவந்தது.

இந்த பிரதிவாதி சார்பில் ஆஜராக வேண்டிய சட்டத்தரணி இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

இந்த நிலையில் அரச செலவில் சட்டத்தரணி ஒருவரை நியமிக்க விரும்புகின்றீர்களா? என நீதிபதி பிரதிவாதியிடம் வினவியபோது அதற்கு அவர் உடன்படவில்லை.

நீதிமன்றத்திற்கு எதேனும் விடயத்தை முன்வைக்க வேண்டுமாயின் அதனை சட்டத்தரணியுடாகவே முன்வைக்க வேண்டும் என எச்சரித்த நீதிமன்றம் அடுத்த வழக்கு விசாரணையின் போது சட்டத்தரணி ஒருவருடன் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டது.

அதற்கமைய வழக்கு விசாரணையை எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம் அன்று முதல் வழக்கு விசாரணையை தொடர்ச்சியாக மேற்கொள்வதாக அறிவித்தது.

Comments (0)
Add Comment