50 குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய ‘டாக்டர் பாம்’ அன்சாரி தலைமறைவு..!!!

மும்பையில் உள்ள மொமின்புரா பகுதியை சேர்ந்தவர் ஜசீஸ்அன்சாரி.

எம்.பி.பி.எஸ். டாக்டரான இவர் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வடிவமைத்து கொடுப்பதில் தேர்ச்சி பெற்றவர்.

1993-ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டார். தீவிர விசாரணையில் இந்தியாவில் நடந்துள்ள சுமார் 50 குண்டு வெடிப்புகளில் இவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இதனால் போலீசார் இவருக்கு “டாக்டர் பாம்” என்று பெயர் சூட்டியுள்ளனர். தற்போது 68 வயதாகும் இவர் ஆயுள் தண்டனை கைதியாக உள்ளார்.

ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டு இருந்தார். தனக்கு பரோல் வழங்க வேண்டும் என்று அவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்திருந்தார்.

அதை ஏற்று அவரை 21 நாட்கள் பரோலில் மும்பை சென்று வர சுப்ரீம் கோர்ட்டு அனுமதித்திருந்தது. மும்பையில் தினமும் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

நேற்று காலை அவர் தொழுகைக்கு சென்று விட்டு வருவதாக கூறி வீட்டை விட்டு புறப்பட்டு சென்றார். அதன் பிறகு அவர் தலைமறைவாகி விட்டார். அவர் மாயமானது பற்றி அவரது மகன் ஜெய்த் அன்சாரி போலீசில் புகார் அளித்தார்.

இதனால் மும்பை போலீசாரும் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரும் உஷார் ஆனார்கள். குடியரசு தின விழாவுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் டாக்டர் அன்சாரி திடீரென தலைமறைவாகி இருப்பது போலீசாருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அன்சாரியை பிடிக்க மகாராஷ்டிரா மாநிலம் முழுக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

Comments (0)
Add Comment