கேரளாவில் தாய்-நண்பரை கொன்றவர் 2 வருடங்களுக்கு பின் கைது..!!!

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள முக்கம் கிழக்கு மணாஞ்சேரியை சேர்ந்தவர் ஜெயவள்ளி (70). இவருக்கு ஏராளமான சொத்துக்கள் இருந்தது.

இவரது மகன் விர்ஜூ (53). இவர் தனது தாயை மிரட்டி சொத்துக்களை எழுதி வாங்கி வந்தார். ஒரு கட்டத்தில் ஜெயவள்ளி சொத்துக்களை எழுதி தர முடியாது என மறுத்து விட்டார்.

இதனால் அவரை கொலை செய்ய விர்ஜூ திட்டமிட்டார். இதற்காக தனது நண்பர் மலப்புரம் மாவட்டம் வண்டூரை சேர்ந்த இஸ்மாயிலை அணுகினார். அவரிடம் எனது தாயை கொலை செய்ய வேண்டும். அதற்கு உதவி செய்ய வேண்டும் என்றார்.

இதற்கு இஸ்மாயிலும் சம்மதித்தார். கொலை செய்ய ரூ. 2 லட்சம் பணம் தர வேண்டும் என கேட்டார். இதற்கு விர்ஜூ சம்மதம் தெரிவித்தார். அதன்படி கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 5-ந் தேதி வீட்டில் தூங்கி கொண்டு இருந்த ஜெயவள்ளியை கழுத்தை நெரித்து விர்ஜூவும், இஸ்மாயிலும் கொலை செய்தனர். பின்னர் பிணத்தை மின் விசிறியில் தொங்க விட்டு தற்கொலை என நாடகம் ஆடினார்கள்.

போலீசாரும் தற்கொலை வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் 2017-ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள கடற்கரையில் இஸ்மாயில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

அவரது தலை ஒரு பகுதியிலும், உடல் ஒரு பகுதியிலும், கை, கால்கள் மற்றொரு பகுதியிலும் கிடந்தது. இஸ்மாயில் உடலை கைப்பற்றிய மஞ்சேரி போலீசார் அவரது கைரேகைகளை பதிவு செய்து பல்வேறு கைரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்தனர்.

இஸ்மாயில் மீது ஏற்கனவே ஒரு வழக்கு உள்ளதால் பழைய கைரேகைகளை ஒப்பிட்டு பார்த்த போது கொலை செய்யப்பட்டு கிடந்தது இஸ்மாயில் என்பதை போலீசார் கண்டறிந்தனர். கொலையாளிகள் யார்? என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த வழக்கை கோழிக்கோடு கிரைம் பிராஞ்ச் போலீசார் கையில் எடுத்தனர்.

கொலை செய்யப்பட்ட இஸ்மாயில் நண்பர்களிடம் போலீசார் விசாரித்த போது இவருக்கு விர்ஜூ என்ற நண்பர் இருப்பதை உறுதி செய்தனர். விர்ஜூ தலைமறைவாகி விட்டார். அவர்தான் இஸ்மாயிலை கொலை செய்து இருக்கலாம் என சந்தேகித்த போலீசார் அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் 2 வருடங்களுக்கு பின்னர் விர்ஜூ போலீசில் சிக்கினார். அவரிடம் கோழிக்கோடு கிரைம் பிராஞ்ச் மற்றும் மஞ்சேரி போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

அப்போது இஸ்மாயில் மற்றும் தனது தாயாரை கொன்றதாக வாக்கு மூலம் அளித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது-

எனது தாயாரை கொலை செய்ய இஸ்மாயில் உடந்தையாக இருந்தார். அதற்காக ரூ. 2 லட்சம் பணம் கேட்டார். என்னால் பணத்தை கொடுக்க முடியவில்லை. ஆனால் அவர் பணத்தை கேட்டு தொந்தரவு செய்து வந்தார்.

அதில் இருந்து விடுபட என்ன செய்து என நினைத்தேன். இஸ்மாயிலை தீர்த்து கட்டி விடலாம் என எண்ணினேன். அதன் படி சம்பவத்தன்று எனது வீட்டிற்கு வருமாறு இஸ்மாயிலை அழைத்தேன்.

அவரும் வந்தார். அவருக்கு மது வாங்கி கொடுத்தேன். போதையில் இருந்த அவரை கத்தியால் குத்தினேன். பின்னர் அரிவாளால் உடலை தனித்தனியாக வெட்டி சாக்கு மூட்டையில் அடைத்து கடற்கரை பகுதியில் தனித்தனியாக வீசினேன். தற்போது போலீசில் சிக்கி கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து விர்ஜூவை போலீசார் கைது செய்தனர். அவர் தாமரைச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Comments (0)
Add Comment