மங்களூரு விமான நிலையத்தில் 3 வெடிகுண்டுகள் சிக்கின..!!!

கர்நாடகாவின் மங்களூரு அருகே பஜ்பேவில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. கேரள எல்லையோரம் அமைந்துள்ள இந்த விமான நிலையத்தின் டிக்கெட் கவுண்ட்டர் அருகே மிகமிக முக்கிய நபர்களின் கார்கள் வந்து நிற்கும் இடத்தில் நேற்று மடிக்கணினி வைக்க பயன்படுத்தப்படும் ஒரு பை நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். உடனே அங்கு விரைந்து வந்த பாதுகாப்பு அதிகாரிகள் விமான நிலையத்தில் இருந்த பயணிகளையும், ஊழியர்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் விமான நிலையம் முழுவதும் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டனர். 5 அடுக்கு வளையத்துக்குள் விமான நிலையம் கொண்டு வரப்பட்டது. மேலும் வெடிகுண்டு நிபுணர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் வெடிகுண்டு நிபுணர்கள் உடனடியாக விமான நிலையத்திற்கு வந்து அந்த பையை கைப்பற்றி சோதனை செய்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அந்த பையில் 3 வெடிகுண்டுகள் இருந்தன. அதைப்பார்த்து வெடிகுண்டு நிபுணர்கள், விமான நிலைய அதிகாரிகள் உள்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் வெடிகுண்டுகளை வைக்க பயன்படுத்தப்படும் வாகனம் வரவழைக்கப்பட்டது. பின்னர் அதில் வெடிகுண்டு பையை வைத்து தொலைவான பகுதிக்கு கொண்டு சென்று, அந்த வெடிகுண்டுகளை நிபுணர்கள் செயலிழக்க வைத்தனர். அதன் பின்னரே அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இதைத்தொடர்ந்து விமான நிலையத்துக்கு மோப்ப நாய்களை வரவழைத்து அங்குலம், அங்குலமாக வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். மேலும் அதிநவீன கருவிகளை கொண்டும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதைப்போல பயணிகள் மற்றும் அவர்களது உடமைகள் அனைத்தும் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இந்த களேபரத்தால் விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குவது சில மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. அங்கு தரையிறங்க இருந்த விமானங்கள் மைசூரு, பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டன. மேலும் மங்களூருவில் இருந்து புறப்பட இருந்த சில விமானங்கள் ரத்தும் செய்யப்பட்டன. வெடிகுண்டுகள் செயலிழக்க வைத்த பின்னரே அங்கு விமான சேவை சீரடைந்தது.

பின்னர் விமான நிலையத்தில் இந்த வெடிகுண்டுகளை வைத்து சென்றவர் யார்? என்பதை கண்டறிய விசாரணைகள் முடுக்கி விடப்பட்டன. இதற்காக அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது, மர்ம நபர் ஒருவர் அந்த பையை ஆட்டோவில் கொண்டு வந்து விமான நிலையத்திற்குள் வைத்து சென்றது தெரியவந்தது.

CCTVவில் பதிவாக காட்சி

அந்த நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக அதிகாரிகள் தொடங்கினர். இதற்காக தனிப்படைகளும் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குண்டுகள் வெடித்திருந்தால் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டு இருக்கும். ஆனால் சரியான நேரத்தில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

குமரி மாவட்டத்தில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை சுட்டுக்கொன்ற தவுபிக், அப்துல் ‌‌ஷமிம் ஆகிய 2 பயங்கரவாதிகளை கர்நாடகாவின் உடுப்பியில்தான் போலீசார் கைது செய்தனர். இந்த சூழலில் மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று 126 பயணிகளுடன் நேற்று பகல் 1 மணியளவில் மங்களூரு விமான நிலையத்தில் இருந்து ஐதராபாத் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் மங்களூரு விமான நிலையத்திற்கு போனில் பேசிய மர்மநபர் ஒருவர், அந்த விமானத்தில் வெடிகுண்டுகள் வைத்திருப்பதாகவும், அது நடுவானில் வெடித்து சிதறும் என்றும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

உடனே பரபரப்புக்கு உள்ளான விமான நிலைய அதிகாரிகளும், போலீசாரும் நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தின் விமானிக்கு தொடர்பு கொண்டு விமானத்தை மீண்டும் மங்களூரு விமான நிலையத்தில் தரையிறக்கும்படி கட்டளையிட்டனர். அதன்படி விமானம் அவசரம் அவசரமாக மங்களூரு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

பின்னர் விமானத்தில் இருந்த பயணிகள் இறக்கப்பட்டு பத்திரமான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து விமானத்தில் மோப்ப நாய்கள் உதவியுடனும், மெட்டல் டிடெக்டர் கருவிகள் துணையுடனும் வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினார்கள். பயணிகளின் உடமைகளும் மீண்டும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதில் சந்தேகத்துக்கு இடமான பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. பின்னர்தான் இந்த மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. இதனால் சுமார் ஒரு மணி நேர தாமதத்திற்கு பிறகு ஐதராபாத் விமானம் புறப்பட்டு சென்றது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பஜ்பே போலீசார் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு, விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் போன்ற சம்பவங்களால் நேற்று மங்களூரு நகரமே பெரும் பதற்றத்தில் காணப்பட்டது.

Comments (0)
Add Comment