முஸ்லிம் சமூகத்தை ஓரம்கட்டும் செயற்பாடு – நிந்தவூர் பிரதேச சபை!!

முஸ்லீம் ஒருவரை அரசாங்க அதிபர் பதவியிலிருந்து நீக்கியிருப்பது அச்சமூகத்தை ஓரம்கட்டும் செயற்பாடு எனவும் பிரதேச அபிவிருத்தியில் அரசியல் நடாத்தப்படுவதாகவும் நிந்தவூர் பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நிந்தவூர் பிரதேச சபையின் மாதாந்த சபை கூட்டமும் 2020ஆம் ஆண்டின் பிரதேச சபையின் 22 ஆவது சபை அமர்வு வியாழக்கிழமை (23) காலை 10.20 மணியளவில் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில் சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது மத அனுஸ்டானம் இடம்பெற்ற பின்னர் 2020 டிசம்பர் மாதத்திற்கான கூட்டறிக்கை உறுதிப்படுத்தல், 2020 டிசம்பர் மாதத்திற்கான கணக்கறிக்கை உறுதிப்படுத்தல் ,தவிசாளர் எம் . ஏ . எம் . தாஹிர் JP உரை இடம்பெற்றன.

தொடர்ந்து LDSP நிதி மூலம் முன்பள்ளி பாடசாலை அமைத்தலுக்கான காணியின் எல்லைகள் மற்றும் அளவீடுகளை இணக்கப்பாட்டுடன் பெறுவது சம்பந்தமாக சபையில் சகல உறுப்பினர்களும் தத்தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

சபையில் திடிரென எழுந்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் எங்களுடைய கட்சி ஆட்சி அதிகாரத்திலும் இல்லை. கட்சியின் தலைவர்கள் அமைச்சு பதவிகளிளும் இல்லை. இதன் காரணமாக தற்போது பிரதேச மக்கள் அடுத்து அபிவிருத்திகளை முன்னெடுக்க பலதடைகள் ஏற்பட்டுள்ளது. ஆகவே அந்த மக்களின் அடிப்படை நலன் சார்ந்த அபிவிருத்திகளை மேற்கொள்ள பிரதேசசபை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் சுட்டிக்காட்டினர்.

இந்த கருத்துக்கு பதிலளித்த பிரதேச சபை தவிசாளர் எமது கட்சிகள் குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இவையிரண்டும் அதிகாரத்தில் இருக்கும்போது அபிவிருத்திகளை கேட்டுப் பெற தவறிவிட்டோம் .எமது கை சோர்ந்து போயுள்ள நிலையில் நமக்கான அபிவிருத்திகளை சபை ஊடாக பெற்றுக்கொள்ள வேண்டுமென சண்டை போடுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று அவற்றை நாம் பேசி தீர்மானித்துக்கொள்ளவேண்டும்.

சபை நடவடிக்கையின் போதும் நிந்தவூர் பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் சபை உறுப்பினர் எம்.ரி.எம். ஷப்ராஸ் சபையில் கருத்து தெரிவிக்கையில் இந்த ஒரு பிரதேசத்தில் இருந்த ஒற்றுமையை அரசியல் அதிகாரத்தின் ஊடாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மக்களின் ஒற்றுமையை பிரித்து கட்சி அதிகாரங்களை மக்கள் மத்தியில் செலுத்தி வருகின்றது. இதில் ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற அதிகாரத்தினையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதேசசபை அதிகாரத்தையும் கொண்டு முரண்பட்ட வகையில் செயற்பட்டு வருவது எமது பிரதேச மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் எனவே இரு தலைமைகளும் கருத்துக்களைப் பேசி ஒற்றுமையுடன் செயற்பட்டால் மாத்திரமே எமது பிரதேசத்தில் ஒற்றுமையை நிலைநாட்டமுடியும் என சபையில் சுட்டிக்காட்டினார்.

இதன்போது அரசாங்க அதிபர்களுள் முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த ஒரே ஒரு அரசாங்க அதிபராக வவுனியா மாவட்டத்தில் கடமையாற்றி வந்த ஹனிபா நீக்கப்பட்டு வேறொரு நபர் நியமித்திருப்பது முஸ்லிம் சமூகத்தை புறந்தள்ளி புதிய சனாதிபதி நடந்துகொள்வதாக பார்க்கமுடிகின்றது .இவ்வாறான நடவடிக்கைகளை ஜனாதிபதி எதிர்காலத்தில் மேற்கொள்வாராயின் அது மேலும் முஸ்லிம் சமூகத்தை பாதிக்கும் என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .

இதே போன்ற ஒரு நடவடிக்கையாக தான் முஸ்லிம் அல்லாத ஒரு அமைச்சரவை அமைந்திருப்பதும் வடகிழக்கு வாழ் தமிழ் பேசும் சிறுபான்மை உள்ள மாகாணங்களில் சிறுபான்மை முஸ்லிம்களை சார்ந்த ஒருவரை மாகாண ஆளுநராக நியமிக்கப்படாமை சனாதிபதி தேர்தலில் சிறுபான்மை மக்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்பதை கருத்திற்கொண்டு இந்த அரசாங்கம் செயற்படுவதாக கருத முடியும் என சபையில் தெரிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக உப தவிசாளர் வை . எல் . சுலைமாலெவ்வை , உறுப்பினர்களான ஏ . எல் . றியாஸ் ஆதம் , ஏ . அஸ்பர், எம் . எல் . ஏ . மஜிட் , எம் . ஐ . எப் . றிஹானா ஆகியோரது முன்மொழிவுகள் இடம்பெற்று கருத்துக்கள் கேட்டறியப்பட்டதோடு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

Comments (0)
Add Comment