யாழ். குப்பிழானில் தொடரும் கொள்ளை!! (படங்கள், வீடியோ)

குப்பிழான் கிராமத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் கொள்ளைச் சம்பவங்ககளைக் கட்டுப்படுத்துவது சம்பந்தமாக ஆராயும் அவசர கலந்துரையாடல் நேற்றுப் புதன்கிழமை( 22-01-2020) மாலை-06 மணி முதல் யாழ். குப்பிழான் விக்னேஸ்வரா சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது.

குப்பிழான் வடக்கு, தெற்கு கிராம சேவகர்களுக்கும், சுன்னாகம் பொலிஸாருக்கும் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கமைய இடம்பெற்ற குறித்த கலந்துரையாடல்வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் த. கணேசநாதனின் ஏற்பாட்டிலும், தலைமையிலும் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அத்துல கருணாபால, குப்பிழான் வடக்கு கிராம சேவகர் அ. அகிலன், ஓய்வுநிலை குப்பிழான் தெற்கு கிராமசேவகர் சோ.பரமநாதன், கிராம இளைஞர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்தக் கலந்துரையாடலின் போது வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் த. கணேசநாதன் மற்றும் சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் கருத்துரைகள் நிகழ்த்தினர்.

அதனைத் தொடர்ந்து குப்பிழான் கிராமத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் கொள்ளைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்காக குப்பிழான் தெற்கு மற்றும் குப்பிழான் வடக்குக்குத் தனித்தனியான விழிப்புக் குழுக்களை உருவாக்குமாறு வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் த. கணேசநாதன் கேட்டுக் கொண்டார்.

குப்பிழான் தெற்கு கடந்த பல மாதத்திற்கு முன்னர் இடம்பெற்ற தொடர் கொள்ளைச் சம்பவங்களையடுத்து விழிப்புக் குழு அமைக்கப்பட்ட போதும் அதற்கு குறித்த பகுதி மக்களின் முழுமையான ஆதரவு கிடைக்கவில்லையெனவும், ஒரு சிலர் மாத்திரமே விழிப்புக் குழுவில் தொடர்ந்தும் பங்குபற்றியதாகவும் சில இளைஞர்கள் கடுமையாக குற்றம் சாட்டினர்.

இதுதொடர்பில் நீங்கள் தான் உங்களுக்குள் பேசித் தீர்மானிக்க வேண்டுமென வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கேட்டுக் கொண்டார்.

இந்தநிலையில் குப்பிழான் வடக்கு இளைஞர்கள் பலரின் முன்வருகையால் குப்பிழான் வடக்கு விழிப்புக் குழு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. குறித்த குழு உடனடியாகச் செயற்படுவதெனவும் முடிவு எட்டப்பட்டது. எனினும், குப்பிழான் தெற்குக்கான விழிப்புக் குழு அமைக்கும் விவகாரம் ஒத்திவைக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

Comments (0)
Add Comment