டெல்லி தேர்தலை இந்தியா-பாகிஸ்தான் போட்டியுடன் ஒப்பிட்ட பாஜக வேட்பாளர்..!!

டெல்லியில் வரும் பிப்ரவரி 8-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளன. மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, டெல்லியில் ஆட்சியைப் பிடிக்க தீவிர களப்பணியாற்றி வருகிறது.

இந்நிலையில், பாஜக வேட்பாளர் கபில் மிஷ்ரா, டெல்லி தேர்தல் தொடர்பாக நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘பிப்ரவரி 8ம் தேதி டெல்லி வீதிகளில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போட்டி நடக்கும்’ என கூறியிருந்தார். இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியுடன் டெல்லி தேர்தலை ஒப்பிட்டு அவர் கருத்து பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தலைமை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து, கபில் மிஷ்ராவின் டுவிட்டர் பதிவு குறித்து அறிக்கை அளிக்கும்படி டெல்லி தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மிகவும் நெருக்கமான தலைவர்களில் ஒருவராக இருந்த கபில் மிஸ்ரா, கெஜ்ரிவாலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஆகஸ்ட் மாதம் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவர் வடக்கு டெல்லியின் மாடல் டவுன் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.

Comments (0)
Add Comment