கோச்சிங் சென்டர் கட்டிடம் இடிந்து விழுந்து மாணவர்கள் உள்பட 5 பேர் பலி – டெல்லியில் சோகம்..!!

புதுடெல்லியில் உள்ள பஜன்புரா பகுதியில் ஒரு நான்கு மாடி கட்டிடம் அமைந்துள்ளது. அதில் தற்போது புதிதாக மேலுமொரு கட்டிடம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதற்கான பணிகள் பாதி நிறைவடைந்திருந்தது.

இதற்கிடையில், அந்த கட்டிடத்தின் ஒரு தளத்தில் பள்ளிக்குழந்தைகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தும் கோச்சிங் சென்டர் ஒன்று செயல்பட்டு வந்தது. அங்கு இன்று சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டது. இதில் 30-க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தின் மேல்பரப்பு திடீரென இடிந்து விழுந்தது. இதனால் கோச்சிங் சென்டர் சிறப்பு வகுப்புகளில் பங்கேற்ற 30-க்கும் அதிகமான மாணவர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய மாணவர்களை விரைந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 4 மாணவர்கள், கோச்சிங் சென்டர் ஆசிரியர் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)
Add Comment