தொற்றுநோயும் புற்றுநோய் ஆகலாம்…!! (மருத்துவம்)

சுந்தரமூர்த்தி சிறு தானிய வியாபாரி. வயது ஐம்பதைத் தாண்டும். அவர் இரண்டு நாட்கள் வீட்டில் தங்கினால் அதிசயம்; எப்போதும் ஊர் ஊராக அலைந்துகொண்டிருப்பார். அவர் வேலை அப்படி. வருடத்தில் முக்கால்வாசி நாட்களில் ஹோட்டல் சாப்பாடுதான். ஹோட்டல் உணவு காரணமாக அவருக்கு வயிற்றில் அல்சர் வந்துவிட்டது. வீட்டுக்கு வரும்போது என்னிடம் சிகிச்சைக்கு வருவார். அவருக்கு அடிக்கடி அல்சர் தொல்லை கொடுப்பதால் இரைப்பையை எண்டோஸ்கோப்பி எடுத்து பரிசோதனை செய்ய வேண்டும் என பலமுறை சொல்லிவிட்டேன். அடுத்தமுறை பார்க்கலாம் என்று நழுவிவிடுவார். அன்றைக்கும் வந்திருந்தார் சுந்தரமூர்த்தி.

ஆனால், புதிதாக அவர் கையில் ஃபைல் ஒன்றும் இருந்தது. வியாபார விஷயமாக வெளியூரில் இருந்தபோது வயிற்றுவலி கடுமையானதால் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் அப்போது அங்கு எடுக்கப்பட்ட பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை விவரங்கள்
அது என்றும் என்னிடம் காண்பித்தார். ‘நீங்கள் சொன்ன எண்டோஸ்கோப்பி பரிசோதனையையும் அங்கு செய்துவிட்டார்கள் டாக்டர்’ என்றார். அந்த ஃபைலை முழுவதுமாகப் பார்த்தேன். அவருக்கு இரைப்பையில் ‘ஹெச்.பைலோரி’ எனும் கிருமி பாதிப்பு இருப்பதும் அதற்கு சிகிச்சை கொடுத்துள்ள
விவரங்களும் இருந்தன.

‘உங்களுக்கு இரைப்பையில் அடிக்கடி புண் ஏற்பட்டதற்கு நீங்கள் சாப்பிட்ட ஹோட்டல் உணவு மட்டும் காரணமல்ல; ‘ஹெச். பைலோரி’ கிருமியும்தான். இதைக் கண்டுபிடிப்பதற்காகத்தான் எண்டோஸ்கோப்பி பரிசோதனையைச் செய்ய வேண்டும் என்று சொன்னேன். நல்லவேளை இப்போதாவது பார்த்தீர்களே, மகிழ்ச்சி!’ என்றேன். ‘இல்லாவிட்டால்…?’ என்று எதிர்கேள்வி கேட்டார் சுந்தரமூர்த்தி.

‘இந்தக் கிருமி வயிற்றில் இருந்து, அதை வருடக்கணக்கில் கவனிக்காமல் இருந்தால் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்பு உண்டு’ என்றேன். அவர் பதறிப்போனார். ‘அல்சர் கிருமியால் புற்றுநோய் வருமா?’ என்று ஆச்சரியமாகக் கேட்டார். ஹெலிகோபேக்டர் பைலோரி கிருமி பற்றி சுந்தரமூர்த்திக்கு சொன்ன பதிலை உங்களுக்கும் சொல்கிறேன்.

உணவால் வரும் தொற்று

ஹெலிகோபேக்டர் பைலோரி கிருமி(Helicobacter pylori) என்பது ஒரு பாக்டீரியா கிருமி. இது அசுத்தத் தண்ணீர் மற்றும் அசுத்தமான உணவு மூலம் அடுத்தவர்களுக்குத் தொற்றும் தன்மையுடையது. இரைப்பையிலும் குடலிலும் தங்கி அல்சரை உண்டாக்குகிறது; அந்த அல்சர் குழியிலேயே இந்தக் கிருமி மறைந்துகொள்வதால் நீண்ட காலம் வயிற்றில் தங்குகிறது. சரியான சிகிச்சை கிடைக்காதவர்களுக்கு இது புற்றுநோயையும் கொண்டு வருகிறது. தற்போது உலகில் மூவரில் இருவருக்கு இந்தக் கிருமி இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆனாலும், எல்லோருக்கும் அல்சர் மற்றும் புற்றுநோய் பாதிப்புகள் வராது; உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்குத்தான் இந்த வாய்ப்பு அதிகம்.

மக்களிடம் துரித உணவுப் பழக்கமும் ஹோட்டல் உணவு சாப்பிடும் பழக்கமும் இப்போது அதிகரித்து வருவதால் இந்த கிருமியின் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. கூடவே அல்சர் பாதிப்பும் புற்றுநோய் பாதிப்பும் தொற்றிக்கொள்கின்றன. இந்தக் கிருமி வயிற்றில் உள்ளதை எண்டோஸ்கோப்பி பரிசோதனை மூலம் அறியலாம். அல்சர் திசு ஆய்வுப் பரிசோதனை, ரேபிட் யூரியேஸ் பரிசோதனை(Rapid Urease Test), யூரியா மூச்சுக் காற்றுப் பரிசோதனை(Urea Breath Test), ரத்தம் மற்றும் மலப் பரிசோதனை ஆகியவற்றில் இதன் இருப்பை அறியலாம்.

அடிக்கடி அல்சர் தொல்லை கொடுப்பவர்களுக்கு இந்தப் பரிசோதனைகள் அவசியம். ஹெலிகோபேக்டர் பைலோரி கிருமி இருப்பது உறுதியானால் உடனே சிகிச்சையைத் தொடங்கிவிட வேண்டும். இரண்டு வாரங்களில் இந்த பாதிப்பு சரியாகிவிடும். மறுபடியும் வராமலிருக்க கைகளின் சுத்தமும் உணவு மற்றும் குடிநீர் சுத்தமும் அவசியம்.

பெண்களுக்கு வரும் புற்றுநோய்

இந்தியாவில், பெண்களிடம் காணப்படும் புற்றுநோய்களில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் (Uterine Cervical Cancer). ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்(Human Papilloma Virus – HPV) என்னும் தொற்றுக் கிருமியின் தாக்குதல் காரணமாக இந்த நோய் வருகிறது. ஆண், பெண் பாலுறவு மூலம் பரவும் நோய் இது. பிறப்புறுப்பில் சுத்தம் குறைந்தவர்களுக்கும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் இந்த வைரஸ் கிருமிகள் கர்ப்பப்பை வாயை ஆக்கிரமித்து, சிறிது சிறிதாக அங்குள்ள செல்களை அரித்துப் புண்ணாக்கி, நாளடைவில் புற்றுநோயை உருவாக்கிவிடும்.

ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் கிருமியின் பாதிப்பு இருக்கிறதா என்பதை அறிய திருமணமான எல்லாப் பெண்களும் பாப்ஸ்மியர்(Pap smear) பரிசோதனையைக் கட்டாயம் செய்துகொள்ள வேண்டும். 65 வயது வரை இதை மேற்கொள்ளலாம். மாதவிலக்கு முடிந்து 7 – 14 நாட்களுக்குள் இதை மேற்கொள்வது வழக்கம். கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும் முக்கியமான பரிசோதனை இது. இந்தத் தொற்றுக்கு நேரடி சிகிச்சை எதுவுமில்லை; தடுப்பதற்கு மட்டுமே தடுப்பூசி இருக்கிறது.

பெண்கள் 9 வயதில் முதல் தவணைத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். இரண்டு மாதங்கள் கழித்து 2-வது தவணை, நான்கு மாதங்கள் கழித்து 3-வது தவணைத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். தகாத பாலுறவைத் தவிர்ப்பதும் தடுப்பூசி போட்டுக்கொள்வதும் இந்த வைரஸ் தொற்றைத் தடுப்பதோடு, புற்றுநோய் ஆபத்தையும் தடுத்துவிடும்.

ஹெபடைட்டிஸ் வைரஸ் தொற்றுகள்!

ஹெபடைட்டிஸ் – பி, ஹெபடைட்டிஸ் – சி ஆகிய வைரஸ் கிருமிகள் கல்லீரலைத் தாக்கும்போது கல்லீரலில் புற்றுநோய் வருகிறது. இந்தக் கிருமிகள் ரத்தம், தாய்ப்பால், விந்து மற்றும் பெண் பிறப்புறுப்புத் திரவங்களில் வெளியேறி அடுத்தவர்களுக்குப் பரவுகின்றன. கர்ப்பிணிக்கு/தாய்க்கு இந்தக் கிருமிகள் இருந்தால், குழந்தைக்கும் பரவும். பாலுறவு மூலமும் இவை பரவுகின்றன. மேலும் ஹெபடைட்டிஸ் வைரஸ் கிருமிகள் உள்ளவரின் ரத்தத்தை முறையாகப் பரிசோதிக்காமல் அடுத்தவர்களுக்குத் தானமாகக் கொடுத்தால், அதைப் பெற்றுக்கொண்டவருக்கு இந்தக் கிருமிகள் பரவுகின்றன.

இவர்களுக்குப் போடப்பட்ட ஊசிக்குழலையும் ஊசியையும் சரியாகத் தொற்றுநீக்கம் செய்யாமல் அடுத்தவருக்குப் பயன்படுத்தினால், அந்த புதியவருக்கும் கிருமிகள் பரவுவதைத் தடுக்க முடியாது. போதை ஊசி போட்டுக்கொள்பவர்கள், ஒரே ஊசியைப் பலரும் பகிர்ந்து கொள்ளும்போதும், தொற்றுநீக்கம் செய்யப்படாத ஊசியைப் பயன்படுத்திப் பச்சை குத்தும்போதும் மற்றவர்களுக்கு இவை பரவ அதிக வாய்ப்பு உண்டாகிறது. இந்த நோயுள்ளவர்கள் பயன்படுத்திய சவரக்கத்தி, ரேஸர் பிளேடு போன்றவற்றில் சுமார் 7 நாட்கள் வரை இந்தக் கிருமிகள் உயிருடன் இருக்கும்.

அந்த சமயத்தில் அந்தப் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தினால், அவர்களுக்கும் இவை பரவிவிடும். ஹெபடைட்டிஸ் வைரஸ் கிருமிகள் முதலில் கல்லீரலைத் தாக்கிக் கல்லீரல் அழற்சி நோயை உண்டாக்கும். அதன் முக்கிய அறிகுறியாக மஞ்சள் காமாலை வரும். அதுவும் சில வாரங்களில் மறைந்துவிடும். ஆனால், இந்த நோய் உடலுக்குள் கொஞ்சம் கொஞ்சமாகக் கடுமையாகும். இதன் அறிகுறிகள் எதுவும் வெளியில் தெரியாது. இந்த நோயாளிகள் தங்களுக்கு நோய் இருப்பதை அறியாமலேயே மற்றவர்களுக்கு இந்தக் கிருமிகளைப் பரப்புவார்கள். இவர்களுக்கு நாட்கள் ஆக ஆக கல்லீரல் சுருங்கும்(Liver Cirrhosis). அதைத் தொடர்ந்து கல்லீரலில் புற்றுநோய்(Liver Cancer) வரும்.

இந்த ஆபத்து ஏற்படுவதற்கு 15 ஆண்டுகள் வரை ஆகும். அதற்குள் அவர்கள் சுதாரித்துக்கொள்ள வேண்டும். கல்லீரல் அழற்சி நோயைக் கணிப்பதற்கு HBsAg, HBcAb. ஹெச்பிவி டிஎன்ஏ வைரல் லோடு (HBV DNA viral load) ஐ.ஜி.எம். (IgM), ஐ.ஜி.ஜி. (IgG)) என பல பரிசோதனைகள் உள்ளன. பாதிக்கப்பட்டவரின் கல்லீரல் எந்த நிலைமையில் உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள வயிற்றை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்(Ultrasound scan), ஃபைப்ரோ ஸ்கேன்(Fibro Scan) மற்றும் சி.டி.ஸ்கேன் (CT scan) எடுத்துப் பார்ப்பது வழக்கம்.

இவற்றுடன் கல்லீரல் என்சைம் பரிசோதனையும்(AST or SGOT), (ALT or SGPT) மேற்கொள்ளப்படும். நோயின் பாதிப்புக்கு ஏற்ப சிகிச்சை தரப்படும். கல்லீரல் சுருக்க நோயைக் கட்டுப்படுத்தத் தவறியவர்களுக்குப் புற்றுநோய் வருவதையும் தடுக்க முடியாது என்பதுதான் பெரும் துயரம். இருக்கும் ஒரே ஆறுதல் ஹெபடைட்டிஸ் – பி தாக்குதலைத் தடுக்கத் தடுப்பூசி இருக்கிறது. இதைக் குழந்தைகளும் பெரியவர்களும்
போட்டுக்கொள்ளலாம்.

(படைப்போம்)

கதிர்வீச்சால் புற்றுநோய் வருவது உண்மைதானா?!

புற்றுநோயை உண்டாக்குவதில் கதிர்வீச்சுகள் முக்கிய காரணியாக இருக்கிறது என்பது உண்மைதான். ஏறத்தாழ 5% புற்றுநோய்களுக்குக் கதிர்வீச்சுகள் காரணமாக இருக்கின்றன. இந்தக் கதிர்வீச்சு சாதாரண சூரிய ஒளியிலும் இருக்கலாம்; அணுக்கதிர் வீச்சாகவும் இருக்கலாம். உடலில் குறிப்பிட்ட திசுக்களில் கதிர்வீச்சு நுழையும்போது அங்குள்ள மரபணுக்களில் பிறழ்வு ஏற்படுவதால் புற்றுநோய் வருகிறது. முக்கியமாக, தோல் புற்றுநோய், ரத்தப் புற்றுநோய், தைராய்டு புற்றுநோய், நிணநீர்க் கழலைப் புற்றுநோய் ஆகியவை வருகின்றன. விரிவான விவரங்கள் கீழே…

1. புற ஊதாக் கதிர்வீச்சு

சூரிய ஒளியில் புற ஊதாக்கதிர்கள் (Ultra violet rays) வெளிப்படுவது இயல்பு. பகலில் அதிக நேரம் வெட்ட வெளியில் வேலை செய்பவர்களுக்கு ‘மெலனோமா’ என்னும் தோல் புற்றுநோய் வருவதற்கு இந்தக் கதிர்வீச்சு ஒரு காரணமாகிறது. இந்தியர்களின் தோல் இயற்கையிலேயே தடித்தும், கறுப்பு நிறத்திலும் இருப்பதால் இந்தக் கதிர்களை அது தடுத்து விடுகிறது. அதனால் இந்த புற்றுநோய் வரும் வாய்ப்பு இந்தியர்களுக்குக் குறைவாகவே இருக்கிறது. ஆங்கிலேயர்களுக்கும் மேற்கத்திய நாட்டினருக்கும் தோல் வெள்ளை நிறத்திலும் மெல்லியதாகவும் இருப்பதால் அவர்களுக்கு இந்தப் புற்றுநோய் வாய்ப்பு அதிகம்.

2. எக்ஸ் கதிர்வீச்சு

எக்ஸ்-ரே, மேமோகிராம், சி.டி.ஸ்கேன், பெட் ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்போது சிறிதளவு எக்ஸ் கதிர்கள் உடலுக்குள் செல்வதுண்டு. இந்த பரிசோதனைகளை அடிக்கடி மேற்கொள்பவர்களுக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. இன்னும் சொன்னால் புற்றுநோய் சிகிச்சையில் கொடுக்கப்படும் கதிர்வீச்சின் அளவு அதிகரித்துவிட்டால்கூடப் புதிய இடத்தில் புற்றுநோய் வரலாம்.

3. கதிர்வீச்சு பணியாளர்களுக்கும் ஆபத்து!

கதிர்வீச்சு உள்ள ஆய்வுக்கூடங்கள், அணு உலைகள் விண்வெளி ஆராய்ச்சி நிலையங்கள் ஆகியவற்றில் பணிபுரிவோருக்கும் தொழில்முறை காரணமாக சிறிதளவு கதிர்வீச்சு உடலுக்குள் செல்கிறது. எக்ஸ் கதிர்களைத் தடுக்கும் காரீயப் பட்டை உள்ள மேலாடையை(Lead apron) அணியாத காரணத்தால் இந்த அளவு அதிகரித்துவிட்டால் அவர்களுக்குப் புற்றுநோய் வரலாம். வருடத்துக்கு ஒருவருக்கு 20 mSv வரை கதிர்வீச்சு உடலுக்குள் செல்லலாம். அரசு அனுமதித்துள்ள இந்த அளவுப்படி இவர்கள் உடலுக்குள் கதிர்வீச்சு செல்கிறதா என்பதை, அதற்கென உள்ள ‘கதிர்வீச்சு அளவுப் பட்டை’யை (Radiation Monitoring Badge) அணிவதன் மூலம் இவர்கள் தெரிந்துகொள்ளலாம்.

4. ரேடான் வாயு

நிலத்தடியிலிருந்து வெளியேறும் ரேடான் வாயு(Radon rays) கதிர்வீச்சுச் செறிவுள்ளது. கட்டடங்களுக்காகவும் சுரங்கத் தொழிலுக்காகவும் பூமியைத் தோண்டும்போது இந்த வாயு கசிந்து கதிர்வீச்சை ஏற்படுத்தலாம். இந்தக் கதிர்வீச்சு பெரும்பாலும் நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்துகிறது.

5. அணு உலை ஆபத்துகள்

இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானில் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்களில் அணுகுண்டு வீசப்பட்டதால் அங்கு பல வருடங்களுக்கு அணுக் கதிர்வீச்சு இருந்ததையும் பல்லாயிரக்கணக்கான பேர் பலதரப்பட்ட புற்றுநோய்கள் வந்து அவதிப்பட்டதையும் வரலாறு அறியும். இதுபோல் ரஷ்யாவில் செர்நோபில் அணு உலை விபத்தும் பொதுமக்களுக்குப் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியதை நாம் அறிவோம். தமிழகத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணு மின் நிலையத்திலும் இதேபோல் விபத்துகள் ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாகவே அங்கு பெரும் எதிர்ப்பு மக்களிடம் கிளம்பியுள்ளது.

Comments (0)
Add Comment