அதிகமாக செலவு செய்பவரா நீங்கள்?! (மருத்துவம்)

பணம் சம்பாதிப்பதே நமக்குப் பிடித்ததுபோல் வாழவும், நமக்குப் பிடித்ததை வாங்கி மகிழவும்தான். ஆனால், இந்த நுகர்வுத்தன்மை சமீபகாலங்களில் அதிவேகமாக வளர்ந்து ஆடம்பரத்தையும் தாண்டி அனாவசியமாக மாறிவிட்டது என்று பல்வேறு நிபுணர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். ‘இதுபோன்ற ஆடம்பர ஷாப்பிங்குகளை மேலோட்டமாக எடுத்துக் கொள்ள முடியாது. அது Impostor syndrome என்ற உளவியல் பிரச்னையாகவும் இருக்கலாம்’ என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

ஒரு சிலர் தங்களுக்குத் தேவையே இல்லை என்றாலும், ஆடம்பரமான பொருட்களை வாங்கிக் குவிப்பார்கள். இந்த பழக்கத்தை இம்போஸ்டர் சிண்ட்ரோம்(Impostor Syndrome) என்கிறார்கள் உளவியல் ஆய்வாளர்கள். இவர்களின் இந்த குறைபாடு கூரிய இருமுனை கத்தியைப் பிடிப்பது போன்றது’ என்று அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழக, நுகர்வோர் ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆடம்பரப் பொருட்களை வாங்குவதன் மூலம், ஒருவர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவதாக நினைத்தாலும், குற்ற உணர்ச்சிக்கு உள்ளாகி தன்னம்பிக்கையை இழக்கிறார்கள். மகிழ்ச்சியோடு ஆடம்பரப் பொருட்களை வாங்கினாலும், விசேஷ நாட்களில் அவற்றைப் பயன்படுத்தும்போது கூடுதலாக, தங்களை ஒரு குற்றவாளியாக நினைத்துக் கொள்கிறார்கள். இதனால் இவர்கள் இம்போஸ்டர் சிண்ட்ரோம் எனும் மனச்சீர்குலைவுக்கு உள்ளாகிறார்கள் என்கிறார்கள் பாஸ்டன் பல்கலைக்கழக உளவியல் ஆய்வாளர்கள்.

அதிக மன அழுத்தம் கொண்டவர்கள் அதிகம் செலவு செய்கிறார்கள் என்ற உளவியல் கருத்தும், அதீத ஷாப்பிங் மேனியாவும் இதற்கு வலு சேர்க்கும் விதமாகவே இருக்கின்றன. இனி உங்கள் செலவுகளையும், வாங்கும் பொருட்களையும் கண்காணியுங்கள். உங்களுக்கு இம்போஸ்டர் சிண்ட்ரோம் இருக்கிறதா, இல்லையா என்பதை நீங்களே கண்டுபிடித்துவிடலாம்!

Comments (0)
Add Comment