இங்கிலாந்தில் டென்னிஸ் புயலுக்கு 2 பேர் பலி – கடுமையாக தாக்கும் என எச்சரிக்கை..!!

இங்கிலாந்து நாட்டில் கடந்த வார இறுதியில் சியாரா புயல் தாக்கியது. இதில் கடும் வெள்ளம் ஏற்பட்டது. சியாரா புயலை கட்டுப்படுத்த கடந்த வாரம், வடஇங்கிலாந்தின் மேற்கு யார்க்ஷைர் பகுதியில் ராணுவ படைகளை அந்நாட்டு ராணுவ அமைச்சகம் குவித்தது. கடந்த வாரம் கடும் பாதிப்பினை இந்த புயல் ஏற்படுத்திய நிலையில், டென்னிஸ் என்ற புதிய புயல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி இங்கிலாந்து நாட்டின் அரசு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில், கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் டென்னிஸ் புயல் இருக்கும். குறிப்பிடும்படியாக, சவுத் வேல்ஸ் நகரில் வசிப்போரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இதன் தாக்கம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டென்னிஸ் புயலின் தாக்கம் குறிக்கும் வரைபடம்

காற்று வேகமுடன் வீசுதல் மற்றும் கடும் வெள்ளப்பெருக்கு ஆகியவற்றால் பொருட்சேதம் ஏற்படுவதுடன் சாலைகளும் மூடப்படும் சூழல் ஏற்படும் என தெரிவித்து உள்ளது.

ஸ்காட்லாந்தின் டுவீட் ஆற்றில் இருந்து தென்மேற்கு இங்கிலாந்தில் உள்ள கார்ன்வால் வரை 200 வெள்ள எச்சரிக்கைகள் இன்று விடப்பட்டு உள்ளன. சவுத்வேல்சின் அபெர்டேரன் பகுதியில் மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் காற்று வீசியுள்ளது. துறைமுகம் பகுதியருகே பல அடி உயரத்திற்கு அலைகள் எழும்பின.

இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதனால் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்வதில் இடையூறு ஏற்பட்டு தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ராணுவ மந்திரி பென் வாலஸ் கூறும்பொழுது, எங்களுடைய ஆயுத படைகள், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் குடியிருப்புவாசிகளுக்கு ஆதரவு தேவைப்படும்பொழுது உதவ தயாராக உள்ளன என கூறினார். எனினும் இந்த வார இறுதிக்குள் வெள்ளப்பெருக்கு கடுமையாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Comments (0)
Add Comment