போலீஸ் தேர்விலும் முறைகேடு- சென்னை ஐகோர்ட்டில் 15 பேர் வழக்கு..!!

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. குரூப்-4, குரூப்-2ஏ, கிராம நிர்வாக அதிகாரி ஆகிய 3 தேர்வுகளில் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வில் ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்களில் மோசடி நடைபெற்றது முதலில் வெளிச்சத்துக்கு வந்தது.

இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-2ஏ தேர்வில் பணம் கொடுத்து தேர்ச்சி பெற்று 42 பேர் பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி இதுவரையில் 49 பேரை கைது செய்தனர். 3 கிராம நிர்வாக அதிகாரிகளும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்த தரகர் ஜெயக்குமார் டி.என்.பி.எஸ்.சி. ஊழியர் ஓம்காந்தன் ஆகியோரிடம் ஏற்கனவே போலீஸ் காவலில் விசாரணை நடத்தப்பட்டது. சிறையில் உள்ள அவர்களை மீண்டும் காவலில் எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று கோர்ட்டில் மனுதாக்கல் செய்கிறார்கள்.

இந்த நிலையில் தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் போலீஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையை சேர்ந்த அன்பரசன் உள்பட 15 பேர் சென்னை ஐகோர்ட்டில் இன்று தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர்கள், சிறை வார்டன்கள், தீயணைப்பு வீரர்கள் என 8 ஆயிரத்து 888 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பாணை வெளியிட்டது.

பின்னர் எழுத்துத்தேர்வு, நேர்முக தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடத்தப்பட்டு, பிப்ரவரி 2-ந்தேதி, தற்காலிக தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதில், ‘சீருடைய பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில், வேலூர் மாவட்டத்தில் ஆயிரத்து 19 பேரும், விழுப்புரத்தில் 763 பேரும் தேர்வாகியுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே பயிற்சி மையத்தில் படித்தவர்கள். இவர்களில் பலர் முறைகேடு செய்து தேர்வாகி உள்ளனர். தேர்வில் கலந்து கொண்டவர்கள் பெற்ற கட் ஆப் மதிப்பெண் விவரங்கள், தமிழ் மொழியில் படித்தவருக்கான இடஒதுக்கீடு ஆகியவை முறையாக வழங்கப்படவில்லை.

எனவே, இந்த தற்காலிக தேர்வுப் பட்டியலை ரத்து செய்ய வேண்டும். சீருடை பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் உதவியுடன், தனியார் பயிற்சி மையங்கள் காவலர் தேர்வுகளில் முறைகேடுகளை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு முறைகேடுகளைவிட, சீருடைப் பணியாளர் தேர்வுகளில் பெரிய அளவில் மோசடி நடந்துள்ளது.

இதுகுறித்து மாநில போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்பதால், சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி சார்பில் நடத்தப்பட்ட தேர்வுகளில் முறைகேடு நடந்திருப்பது தொடர்பான பரபரப்பு அடங்கும் முன்னரே போலீஸ் தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு போலீஸ் தேர்வு எழுதியவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Comments (0)
Add Comment