தீவக பிரதேச பிரிவுகளின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்துக்கு அழைக்காததால் பிரதேச சபை உறுப்பினர்கள் போராட்டம்!! (படங்கள் & வீடியோ)

தீவக பிரதேச செயலகங்களை உள்ளடக்கி நடைபெறும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கு பிரதேச சபை உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தக் கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் இன்று முற்பகல் ஆரம்பமானது.

வேலணை, ஊர்காவற்றுறை மற்றும் நெடுந்தீவு ஆகிய பிரதேச செயலகங்களை உள்ளடக்கி இந்தக் கூட்டம் இடம்பெற்றது.

கூட்டத்துக்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனை முற்றுகையிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

“சமூக மட்டத்தில் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடல் செய்வதற்கு அரச உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களுக்கே உத்தியோகபூர்வ அழைப்பு பிரதேச செயலகங்களால் விடுக்கப்பட்டது.

சமூக ரீதியில் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாட அழைப்பு முக்கியதுவம் அல்ல. அவர்கள் தாமாக முன் வர வேண்டும்.

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புகுழுக் கூட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்ட போதும் மக்கள் பிரதிநிதி எனக்கூறுவர்கள் வருகை தரவில்லை.

ஆனால் உத்தியோகபூர்வ அழைப்பு இன்றைய கூட்டத்தில் விடுக்கவில்லை என போராடுகிறார்கள். இவர்கள் யார்? மக்கள் சார்பாகவா அல்லது அரசியல் ரீதியிலா செயற்படுகிறார்கள்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

அழைப்பு விடுக்கப்பட்டாத போதும் தாமும் உள்ளே வந்து கூட்டத்தில் பங்குபற்றி கருத்துக்களை முன்வைக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அழைத்தார். எனினும் அழைக்கப்படாத கூட்டத்தில் பங்கேற்க மட்டோம் என பிரதேச சபை உறுப்பினர்கள் கூறியதுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

Comments (0)
Add Comment