அவசரம்… அவசரமாக ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணி… ஊரடங்கிலும் விறு விறு !!

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கூட சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிட கட்டுமானப்பணிகள் அவசரம் அவசரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொரோனா வைரஸ் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் ஒட்டுமொத்த மாநிலமும் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக முடங்கியுள்ளது. தினக்கூலிக்கு வேலைக்கு செல்வோர் முதல் மாதத்தில் லட்சங்களில் ஊதியம் பெறுவோர் வரை வீடுகளில் அடைபட்டு கிடக்கின்றனர். ஆனால் இந்த நிலையில் கூட சென்னை காமராஜர் சாலையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

ஜெயலலிதா நினைவிட கட்டுமானப்பணிக்காக கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் ரூ.50 கோடி நிதி ஒதுக்கி பணிகளை தொடங்கியது தமிழக அரசு. பீனிக்ஸ் பறவையில் இறக்கை போன்ற வடிவமைப்புடன் உலகத்தரம் வாய்ந்த கட்டிட நுட்பங்களுடன் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது. முழுக்க முழுக்க இத்தாலி மார்பிள்கள் பதிக்கப்பட்டு மிக பிரமாண்டமாக உள் வடிவமைப்பு செய்து முடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியில் கடந்த 2 ஆண்டுகளாக வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் அனைவரும் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தின் அருகிலேயே முகாம்கள் அமைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இப்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அந்த முகாம்களை விட்டு எந்த தொழிலாளரும் வெளியே செல்ல அனுமதியில்லை. அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகளே வாங்கிக் கொடுத்து விடுகின்றனர். மேலும், வேலை இல்லாமல் இருப்பதற்கு கூலியுடன் கூடிய உணவுப் பொருட்களும் கிடைப்பதால் வடமாநில தொழிலாளர்கள் ஜரூராக ஜெயலலிதா நினைவிடத்திற்கு பைனல் டச் கொடுத்து வருகின்றனர்.

மே மாதம் இறுதிக்குள் ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணிகளை முழுவதுமாக முடிக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு ஏற்கனவே முதல்வர் தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அதன் பணிகளை நிறுத்தினால் தற்போதைய நிலவரப்படி அது முடிவடைய மேலும் சில மாதங்கள் பிடிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் முகாம்களை விட்டு எங்கும் வெளியே செல்ல வாய்ப்பில்லை என்பதால் அவர்களை வைத்து பணிகளை முடிக்க அவசரம் காட்டி வருகிறது பொதுப்பணித்துறை.

கொரோனா பதற்றம் தணிந்த பின்னர் முதல் வேலையாக ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவிற்கு தேதி குறிக்க வேண்டும் என்பதில் உறுதியாகி இருக்கிறது ஆளுங்கட்சி தரப்பு. இதனிடையே எம்.ஜி.ஆர். நினைவிட நுழைவு வாயில் பகுதியில் பாலீஷ் போடும் பணிகள் கடந்த மாதமே முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment