மகாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்துங்கள் – முன்னாள் முதல் மந்திரி கோரிக்கை..!!

மகாராஷ்டிராவில் கொரோனா தீவிரமடைந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி 52 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து 15 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், அம்மாநிலத்தில் கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 1,695 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே, மராட்டியத்தில் சிவசேனா ஆட்சியில் இருந்தபோது (1999-ம் ஆண்டு) முதல்- மந்திரியாக இருந்தவர் நாராயண் ரானே.

உத்தவ்தாக்கரேயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிவசேனாவில் இருந்து விலகி 2005-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

பின்னர் காங்கிரசில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2015 ஆம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகி ‘மஹாராஸ்டிரா சுவாபிமான்’ என்ற தனி கட்சியை தொடங்கினார். ஆனால், 2019-ம் ஆண்டு தன்னையும், தனது கட்சியை பாஜகவுடன் இணைத்துக்கொண்டார்.

இந்நிலையில்,சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு மகாராஷ்டிராவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த தவறியதாகவும் இதனால் மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் எனவும் முன்னாள் முதல்மந்திரி நாராயண் ரானே ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் முதல் மந்திரி நாராயண் ரானே, ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி சந்திப்பு

இது குறித்து மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்த நாராயண், சிவசேனா கூட்டணியில் உத்தவ் தாக்கரே தலைமையில் செயல்படும் மகாராஷ்டிரா அரசு கொரோனா வைரஸ் விவகாரத்தை கையாளுவதில் தோல்வி அடைந்து விட்டது. அரசு மருத்துவமனைகள் மிகவும் மோசமான சூழ்நிலையில் உள்ளது என தெரிவித்தார்.

மேலும், தற்போது உள்ள நிலைமையை சீரமைக்க மருத்துவமனைகளை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும். இதனால் மகாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என ஆளுநரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments (0)
Add Comment