சுரேஷூக்கு கொரியரில் வந்து இறங்கிய “அந்த” ஷாக்.. சூலூரையே வியக்க வைத்த மன்னார்குடி இளைஞர்! (வீடியோ, படங்கள்)

டென்ஷனில் இருந்த சுரேஷூக்கு கொரியரில் வந்து இறங்கியது அந்த திடீர் ஷாக்.. சூலூரையே பரபரப்புக்கும், வியப்புக்கும் உள்ளான அந்த சம்பவம் இதுதான்!

மன்னார்குடியை சேர்ந்தவர் பிரசாந்த்.. இவர் கோவை மாவட்டம் சூலூரில் ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வந்தார்.. லாக்டவுனால் கடைகள் மூடப்படவும், பிரசாந்த்துக்கும் வேலை இல்லாமல் போனது.. அதனால் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தால், எந்த வண்டியும் கிடைக்கவில்லை.

யார் யார் மூலமாகவோ முயற்சி செய்தும், அவரால் மன்னார்குடி போய் சேரவில்லை.. இந்த சமயத்தில்தான் தான் வசிக்கும் பகுதியில் உள்ள லேத் பட்டறை முன்பு ஒரு பைக் நிறுத்தப்பட்டிருந்தது.. அந்த பைக் யாருடையது என்று தெரியவில்லை.. ரொம்ப நேரமாக பைக் அங்கேயே நிற்கவும், அதை எடுத்து கொண்டு மன்னார்குடிக்கு பறந்துவிட்டார் பிரசாந்த்.

இதனிடையே பைக்கின் ஓனர் சுரேஷ்குமார் என்பவர், லேத் பட்டறை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கை காணவில்லை என்று போலீசில் புகார் செய்தார்.. அதன்பேரில் போலீசார் அந்த பைக் திருடனை தேடி வந்தாலும், சுரேஷூக்கு மனசே ஆறவில்லை.. அதனால் தன் பங்குக்கும் அந்த திருடன் யார் என்பதை கண்டுபிடிக்கும் டிடெக்டிவ் வேலையில் இறங்கினார்.

அதனடிப்படையில், பைக் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தபோது, ஒருவர் தன்னுடைய பைக்கை தள்ளி கொண்டே போனதை பார்த்தார்.. இதையடுத்து அந்த நபர் யார், என்ன என்ற விசாரணையில் இறங்கி, மொத்த டீடெலையும் எடுத்துவிட்டார் சுரேஷ்.

இப்படி தன்னை பற்றின ஜாதகத்தை சுரேஷ் கண்டுபிடித்துவிட்டார் என பைக் திருடிய பிரசாந்துக்கும் தெரிந்துவிட்டது.. போலீசில் மாட்டினால் களி தின்ன வேண்டியதுதான் என்று பயந்த பிரசாந்த், சுரேஷின் அட்ரஸை தேட ஆரம்பித்தார்.. அந்த திருட்டு பைக்கில்தான்தான் சுரேஷின் அட்ரஸ், டாக்குமெண்ட்டுகள் இருந்தது.. அதை வைத்து, திருட்டு பைக்கை கூரியர் மூலம் சுரேஷூக்கு அனுப்பினார்.

சூலூர் கூரியர் ஆபீசில் இருந்து சுரேஷூக்கு போன் செய்து, “உங்களுக்கு கூரியரில் ஒரு பைக் வந்துள்ளது” என்று சொன்னதும் அதிர்ச்சியடைந்து விரைந்து வந்தார் சுரேஷ்.. அது தன்னுடைய திருட்டு பைக்தான் என்பது உறுதியானதும் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தார்.

அத்துடன் போலீசுக்கு சென்ற சுரேஷ், தனக்கு பைக் கிடைத்துவிட்டது, பிரசாந்த் தவறை உணர்ந்து கூரியர் அனுப்பி உள்ளார்.. அதனால் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவேண்டாம் என்று சொல்லிவிட்டார். கூரியரில் திருட்டு பைக் வந்த சம்பவம் சூலூரில் வியப்பை தந்து வருகிறது.


Comments (0)
Add Comment