கல்முனை பிராந்தியத்தில் ஆலய உண்டியல்கள் ஒலிபெருக்கி திருட்டு!!

கல்முனை பிராந்தியத்தில் ஆலய உண்டியல்கள் ஒலிபெருக்கி திருட்டு மற்றும் துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்ட இருவர் இரு வேறு திருட்டு சம்பவங்களில் கைதாகி உள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்ட சாய்ந்தமருது பகுதியில் மரண வீடொன்றில் துவிச்சக்கரவண்டி ஒன்று களவாடப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அதே பகுதியை சேரந்த 43 வயதான போதைப்பொருளுக்கு அடிமையான சந்தேக நபர் கைதாகியுள்ளார்.

இவ்வாறு வெள்ளிக்கிழமை(5) முற்பகல் கைதான சந்தேக நபர் ஏலவே மற்றுமொரு சம்பவத்தில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டவர் எனவும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டபோது தப்பி செல்ல முயன்ற நிலையில் தற்போது மற்றுமொரு துவிச்சக்கர வண்டி திருட்டிற்காக கைதாகியுள்ளதாகவும் நாளை (6) சந்தேக நபரை கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதே வேளை அண்மைக்காலமாக கொரோனா அனர்த்த காலங்களில் கல்முனை பிராந்தியத்தில் உள்ள ஆலயங்களில் உண்டியல் திருட்டு மற்றும் ஒலிபெருக்கி சாதனங்கள் களவாடப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீத் பிரியந்தவின் வழிநடத்தலில் கல்முனை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ. எல். முஹம்மட் ஜெமில் தலைமையில் பொலிஸ் குழுவொன்று சிறப்பு புலனாய்வு நடவடிக்கையில் ஈடுபட்டு மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டுச்சோலை பகுதியை சேரந்த 19 வயதான இளைஞனை சந்தேகத்தில் கைது செய்து விசாரித்தது.

இதனடிப்படையில் குறித்த இளைஞன் கடந்த காலங்களில் கல்முனை பிராந்தியத்தில் உள்ள கோவில்களில் இடம்பெறும் உற்சவங்களுக்காக ஒலிபெருக்கிகளை வாடகை;காக வழங்க கூலியாள் வேடத்தில் உளவு பார்த்து திருடுவதாக பொலிஸ் விசாரணையில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய குறித்த சந்தேக நபரை பொலிஸார் விசாரணை மேற்கொண்ட நிலையில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் குறித்த சந்தேக நபருக்கு இரு வேறு முறைப்பாடு உள்ளதாகவும் அறிந்து கொண்டனர்.

குறித்த சந்தேக நபரை நாளை (6) கல்முனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

Comments (0)
Add Comment